கோலாலம்பூர், மார்ச் 8: சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீன ஜோடியான சென் போ யாங்-லியு யியை வீழ்த்திய பின்னர், தேசிய ஆடவர் இரட்டையர் ஆரன் சியா-சோ வூய் யிக், 2026 ஆல் இங்கிலாந்து பட்டத்தை வெல்வதற்கு ஒரு படி அருகில் உள்ளனர்.
பர்மிங்காம் உட்டாலிட்டா அரங்கில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், போட்டியின் இரண்டாம் நிலை வீரர்களான இவர்கள், உலகத் தரவரிசையில் 11 வது இடத்தில் உள்ள சீன இணையை 42 நிமிடங்களில் 21-11, 21-19 என்ற நேர் செட் கணக்கில் தோற் கடித்தனர்.
ஆரன்-வூய் யிக் இணை, முதல் செட்டை வெறும் 15 நிமிடங்களில் எளிதாகக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினர்.இருப்பினும், இரண்டாவது செட் மிகவும் கடுமையாக இருந்தது. ஒரு கட்டத்தில் 15-18 எனப் பின்தங்கியிருந்த அவர்கள், பின்னர் அபாரமாக மீண்டு வந்து 18-18 என புள்ளிகளைச் சமன் செய்து, இறுதியில் 21-19 என்ற கணக்கில் செட்டையும் ஆட்டத்தையும் வென்று, உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள தங்களின் தகுதியை நிலைநாட்டினர்.
இறுதிப் போட்டியில், போட்டியின் முதல் நிலை வீரர்களான தென் கொரியாவின் கிம் வோன் ஹோ-சியோ சியுங் ஜே அல்லது இந்தோனேசியாவின் ரேமண்ட் இந்திரா-நிக்கோலஸ் ஜோக்வின் இணையை ஆரன்-வூய் யிக் சந்திப்பார்கள்.
கடைசியாக 2007 ஆம் ஆண்டு மலேசிய ஆடவர் இரட்டையர் சார்பில் கூ கியென் கியட்-டான் பூன் ஹியோங் இணை ஆல் இங்கிலாந்து பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா








