ஷா ஆலாம், மார்ச் 7 – சிலாங்கூர் மாநிலத்தின் தற்போதைய பன்றி இறைச்சித் தேவையில் சுமார் 20 விழுக்காட்டை மட்டுமே உள்ளூர் உற்பத்தியால் ஈடுகட்ட முடிவதாக மாநில விவசாயத் துறைக்கான செயற்குழு உறுப்பினர் டத்தோ ஐஆர். இஷாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முஸ்லிம் அல்லாத சமூகத்தினரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு சிலாங்கூர் மாநிலம் இன்னும் பிற மாநிலங்களையே, முக்கியமாக பேராக் மற்றும் சரவாக் மாநிலங்களை பெரிதும் நம்பியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சரவாக் மாநிலத்திலிருந்து வாரத்திற்கு 2,000 பன்றிகளை இறக்குமதி செய்ய மாநில அரசு அனுமதி வழங்கியுள்ள போதிலும், தற்போது வாரத்திற்கு சுமார் 800 பன்றிகள் மட்டுமே வந்து சேருகின்றன.
இந்த அளவு தற்போதைய சந்தை தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை என்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் (SACC) நடைபெற்ற பி.கே.என்.எஸ் (PKNS) இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
உயிருள்ள பன்றிகளின் வரத்து குறைவாக இருப்பதால், சந்தை தேவையைச் சமாளிக்க தனியார் துறையினர் உறைவிக்கப்பட்ட பன்றி இறைச்சியை (frozen pork) இறக்குமதி செய்து வருவதாகவும் அவர் விளக்கினார்.
அதேவேளையில், விநியோகப் பற்றாக்குறையினால் ஏற்படும் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவை அதிகரித்தால் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநிலத்தின் பன்றி இறைச்சித் தேவையை முழுமையாக இறக்குமதி மூலம் ஈடுகட்ட மாநில செயற்குழு (MMKN) முடிவெடுத்திருந்தது.
மாநிலத்தின் 70 விழுக்காடு இறைச்சித் தேவை வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படுவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும், முஸ்லிம் அல்லாதவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பன்றி இறைச்சி இறக்குமதிக்கு முறையான உரிமங்களை வழங்குமாறு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சிலாங்கூர் சுல்தான் அவர்கள் அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








