சபாக் பெர்ணம், மார்ச் 5: வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு (air pasang besar) காரணமாக பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு, மாநில அரசின் பேரிடர் நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM500 உதவி வழங்கப்பட்டது.
இந்த நிதி உதவியை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் அவர்கள், சபாக் பெர்ணம் மாவட்ட மற்றும் நில அலுவலக வளாகத்தில் வழங்கினார்.
ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகை காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்க இந்த உதவி விரைவாக வழங்கப்பட்டுள்ளது.
2025 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் புயல் காரணமாக கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சிகிஞ்சான், பாரிட் லீமா, சுங்கை பெசார் மற்றும் சுங்கை ஆயார் தாவார் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.
மேலும் சில இடங்களில் அணைகள் (ban) உடைந்ததால், கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததாகவும் அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களின் தாக்கத்தை எதிர்காலத்தில் குறைக்க, அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் அணையை மேம்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
“இதுவரை சிகிஞ்சான் பகுதியில் அணைகளை மேம்படுத்த RM4 மில்லியனுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மிக அபாயம் உள்ள பகுதிகளில் இந்த அமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவோம்,” என்றார்.
மேலும், மீதமுள்ள பெறுநர்களுக்கு இரண்டாம் கட்ட உதவி விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.










