16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சொந்தமாகச் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கத் தடை; பெற்றோர்களின் மேற்பார்வையில் கணக்குகளை நிர்வகிக்க அனுமதி

5 மார்ச் 2026, 3:15 AM
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சொந்தமாகச் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கத் தடை;  பெற்றோர்களின் மேற்பார்வையில் கணக்குகளை நிர்வகிக்க அனுமதி

கோலாலம்பூர், மார்ச் 5: 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்களின் பெயரில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க அனுமதி இல்லை என்றும், ஆனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சார்பில் கணக்குகளை நிர்வகிக்கலாம் என்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

இணையப் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாகச் சிறுவர்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய சைபர் வேட்டையர்களிடமிருந்து இளம் தலைமுறையினரைப் பாதுகாப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும்.

அந்த கணக்குகளை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியமான விஷயம் என்றும், பிள்ளைகள் சொந்தமாகப் கணக்குகளை வைத்திருப்பதை விடப் பெற்றோர்கள் அதை நிர்வகிக்கும்போது, யாராவது அடையாளம் தெரியாத நபர்கள் பிள்ளைகளுடன் தொடர்பு கொள்கிறார்களா என்பதை எளிதில் கண்காணிக்க முடியும் என்றும் அவர் விளக்கினார்.

'மடாணி சீர்திருத்த நலத்திட்டம்: ரமலான் ஏஹ்சான் காசிஹ் 2026' பங்களிப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கணக்குகளைப் பதிவு செய்யும்போது 16 வயது வரம்பைக் கட்டாயமாக்குவது குறித்துச் சமூக ஊடகத் தளங்களுடன் இணைந்து அரசாங்கம் ஒரு சோதனைத் திட்டத்தை அமல்படுத்தி வருவதாகக் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் முறையிலிருந்து மலேசியா மாறுபட்டு, பயனர்களின் அடையாளம் மற்றும் வயதை உறுதிப்படுத்த 'மைகாட்' (MyKad) அடிப்படையிலான கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறுவர்கள் யூடியூப் (YouTube) போன்ற தளங்களில் உள்ளடக்கங்களைப் பார்க்கத் தடையில்லை, ஆனால் அவர்கள் சொந்தமாகக் கணக்குகளைத் திறக்கக் கூடாது என்பதே விதிமுறையாகும்.

 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மின்னியல் செயல்பாடுகளில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும், நீண்ட நேரம் கண்காணிப்பு இன்றிச் சாதனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் ஃபாஹ்மி வலியுறுத்தினார்.

மின்னணுச் சாதனங்கள் பிள்ளைகளை வளர்க்கும் 'குழந்தைக் காப்பாளர்கள்' (Nanny) அல்ல, இதில் பெற்றோர்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் சாடினார்.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் 'இ-காசிஹ்' (eKasih) திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 150 ஏழை எளிய மக்களுக்குத் தலா 500 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் யாரும் விடுபடக் கூடாது என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் 'மடாணி' அரசாங்கத்தின் நோக்கத்தை இது பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.