சிலாங்கூர் போக்குவரத்துத் துறை 71,918 வாகனங்களைச் சோதனை செய்தது; 23,471 சம்மன் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன

5 மார்ச் 2026, 1:42 AM
சிலாங்கூர் போக்குவரத்துத் துறை 71,918 வாகனங்களைச் சோதனை செய்தது; 23,471 சம்மன் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், மார்ச் 5: கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கிய வர்த்தக வாகனங்களுக்கான சிறப்பு 'ஒப் கெம்பூர்' (Op Gempur) நடவடிக்கையின் மூலம் சிலாங்கூர் மாநில போக்குவரத்துத் துறை மாநிலம் முழுவதும் மொத்தம் 71,918 வாகனங்களைச் சோதனையிட்டது.

 இந்தச் சோதனையில் 5,053 வாகனங்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாகவும், அதன் விளைவாகச் சோதனை காலப்பகுதியில் மொத்தம் 23,471 சம்மன் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாகவும் சிலாங்கூர் போக்குவரத்துத் துறை இயக்குநர் அஸ்ரின் போரான் தெரிவித்தார்.

அதிகப்படியாக தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்பாக 4,336 வாகனங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, 2,077 வாகனங்கள் தொழில்முறை ஓட்டுநர் உரிமம் (GDL/PSV) இல்லாமலும், 1,800 வாகனங்கள் தகுதியான ஓட்டுநர் உரிமம் (CDL) இல்லாமலும் இயக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், சாலை வரி தொடர்பான விதிமீறல்களில் 1,884 வாகனங்களும், காப்புறுதி பாதுகாப்பு இல்லாத காரணத்திற்காக 689 வாகனங்களும் சிக்கின; மற்ற இதர குற்றங்களுக்காக 3,204 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 வழங்கப்பட்ட 23,471 நோட்டீஸ்களில், 14,208 பி22 சம்மன் நோட்டீஸ்கள், 4,126 வாகனப் பயன்பாட்டுத் தடை நோட்டீஸ்கள், 3,983 வாகனப் பரிசோதனை உத்தரவு நோட்டீஸ்கள் மற்றும் 250 விசாரணைக்கு நேரில் வரும் நோட்டீஸ்கள் ஆகும். 

சாலை விதிகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்த, குறிப்பாக வர்த்தக வாகன உரிமையாளர்கள் மத்தியில் சிலாங்கூர் போக்குவரத்துத் துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று அஸ்ரின் வலியுறுத்தினார்.

போக்குவரத்து தொடர்பான புகார்களை அளிக்க விரும்பும் பொதுமக்கள், aduantrafik@jpj.gov.my என்ற மின்னஞ்சல் அல்லது 'e-aduan' செயலி வாயிலாகப் புகார் அளிப்பவரின் முழு விவரங்கள் மற்றும் குற்றத்தின் தகவல்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.