அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி: ஊடகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சியோனிச குழுக்களுக்கு தொடர்பு

3 மார்ச் 2026, 5:40 AM
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி: ஊடகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சியோனிச குழுக்களுக்கு  தொடர்பு

கோலாலம்பூர், மார்ச் 3 – முக்கிய சியோனிச குழுக்கள் உட்பட அனைத்துலக ஊடகங்கள் மற்றும் அமைப்புகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு உள்ளூர்வாசிகளே ஆதரவளிப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அம்பலப்படுத்தினார்.

 இந்த இயக்கம் வெளிநாட்டில் தளம் கொண்டிருப்பதாகவும், தற்போதைய அரசாங்கத்தைக் கேள்விக்குட்படுத்தி, அச்சுறுத்தும் உத்திகளைத் திட்டமிடுவதற்கு பெரும் நிதியைக் கொண்டிருப்பதாகவும் அரச மலேசியக் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் அவர்  கூறினார்.

ஆரம்பக்கட்ட அறிக்கையின்படி, இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பிரமுகர்கள் 2025-ஆம் ஆண்டு முழுவதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆறு சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

 "அந்தக் காலகட்டத்தில், அனைத்துலக கலந்துரையாடல்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் (NGO) மூலம் தகவல்களைப் பெற்று செல்வாக்கு செலுத்துவதும், அதன்மூலம் ஒரு 'சர்வதேச உந்துதலை' உருவாக்குவதும் அவர்களின் உத்தியாக இருந்தது. பின்னர், மேலதிக நடவடிக்கைக்காக புளூம்பெர்க்  போன்ற ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

 "அவர்களின் அடுத்தகட்ட உத்தி, அரசாங்கத்தின் முயற்சிகளை, குறிப்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் அனைத்து வெளிநாட்டு ஊடகங்களையும் தொடர்புகொள்வதாகும். மேலும், நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைச் சிதைக்கும் ஒரு சித்திரத்தை உருவாக்க, வெளிநாடுகளுடனான தங்களின் தொடர்புகளையும் வலிமையையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி தொடர்பான காவல்துறை விசாரணையின் நிலை மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து டத்தோ ஸ்ரீ ஷாஹிதான் காசிம் (PN-ஆராவ்) எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின்போது பிரதமர் பதிலளித்தார்.

 மேலும், அரசாங்கத்தைக் கேள்விக்குட்படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையைக் குலைப்பதற்கு வங்கி அதிகாரிகளைப் பயன்படுத்துவதற்கும் அனைத்துலக ஊடகங்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்புகளை இந்தக் குழு பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன என்றார்.

 "நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளை நிர்ணயிக்கவும், பாதிக்கவும், அச்சுறுத்தவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான உறவுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது," என அவர் கூறினார்.

 "பின்னர், ஊழல் வழக்குகள் உட்பட விசாரணையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரமுகரைப் புகழ்வதற்கும், அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் புளூம்பெர்க் உட்பட முழு அனைத்துலக ஊடக வலையமைப்பையும் பயன்படுத்த வழிகளைத் தேடியுள்ளனர்," என்று அன்வார் கூறினார்.

 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) நடத்தப்பட்டு வரும் பல பெரிய அளவிலான ஊழல் விசாரணைகளின் காரணமாகவே அரசாங்கத்தைக் கவிழ்க்கும் இந்த முயற்சிகள் தூண்டப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.