குவாந்தான், மார்ச் 3 – குர்ஆனை மிதித்து, அந்தச் செயலின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் உயர் கல்வி நிலைய மாணவர் ஒருவர் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.
21 வயதான அந்த ஆடவர், இன்று காலை 8 மணியளவில் குவாந்தான் நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புனிதமாகக் கருதப்படும் குர்ஆனை மிதித்து அவமதித்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் 295-வது பிரிவின் கீழ் அந்த மாணவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் நேற்று அறிவித்தது. இஸ்லாத்தை அவமதிக்கும் செயல் என்பதை அறிந்தே அவர் இதனைச் செய்துள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் 295-வது பிரிவின்படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம். மேலும், 'Threads' செயலி மூலம் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் மிகவும் அருவருப்பான தகவல் தொடர்புப் பதிவை உருவாக்கியதற்காக, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(a) பிரிவின் கீழும் அந்த மாணவர் மீது குற்றஞ் சாட்டப்படும்.
இந்தச் சட்டத்தின் கீழ், 500,000 ரிங்கிட்டிற்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம். கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி, சமூக ஊடகங்களில் குர்ஆனை மிதித்து இஸ்லாத்தை அவமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில், மலேசிய பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக (UMPSA) மாணவர் ஒருவர் விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நாடு தழுவிய அளவில் 82 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், நடத்தப்பட்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர் மீது குற்றஞ் சாட்டப் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் நேற்று தெரிவித்தார். மதத்தின் புனிதத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் சீண்டும் வகையிலான இந்த விவகாரம், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.







