பெட்டாலிங் ஜெயா, ஜன 27 - பெட்டாலிங் ஜெயா, பீஜேஎஸ் 4 பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமியக் கல்லறை நிலத்தை, மூன்று இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்கள் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக, சமூக ஊடகங்களில் பரவிவரும் தகவல்கள் தவறானது என இஸ்லாமிய மத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி நகா தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜனவரி 23ஆம் திகதி அன்று தனது முகநூல் பதிவில் சமூக செயற்பாட்டாளர் தாமிம் டாஹ்ரி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு மாற்றுத் தளமாக வழங்கப்பட்ட நிலம், முன்னர் சூராவ் கட்ட முன்மொழியப்பட்டதாகக் கூறியிருந்தார். இந்தக் கருத்து சமூக ஊடக பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால், பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம் மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேற்கொண்ட சரிபார்ப்பின் அடிப்படையில், அந்த “மாற்றுத் தளம்” ஆரம்பத்திலிருந்தே இஸ்லாம் அல்லாத மத வழிபாட்டு தளத்திற்கு (RIBI) ஒதுக்கப்பட்ட நிலம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிலம் சூராவ் கட்ட முன்மொழியப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்த RIBI தளம் கோயிலுக்காக மாற்றுத் தளமாக அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டதல்ல, அதனை சமய நோக்கத்திற்கு அந்த நிலத்தைப் பயன்படுத்த கோயில் நிர்வாகம் எம்பிபிஜே மற்றும் மாவட்ட நில அலுவலகத்திடம் விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி பெற வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கங்கள் சமூக ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய தவறான பார்வைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என சமய விவகார மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான முகமட் ஃபஹ்மி குறிப்பிட்டார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில அரசு, இஸ்லாமிய கல்லறை நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுவதற்கான தெளிவான திட்டம், நடவடிக்கைகள் மற்றும் கால அட்டவணையை ஏற்கனவே வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நீண்ட காலமாக தாமதமடைந்திருந்த கல்லறை மேம்பாட்டு பணிகளை, சிலாங்கூர் இஸ்லாமிய மத துறை (JAIS) 2026 ஜூன் மாதத்திலிருந்து தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து தரப்பினரும் அமைதியை கடைப்பிடித்து, இன மற்றும் மத உணர்வுகளை பாதிக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சிலாங்கூர் மாநில இஸ்லாமிய நிறுவனங்களின் பொறுப்பின் கீழுள்ள நிலங்களை பாதுகாப்பதும், எந்தவித ஆக்கிரமிப்பு அல்லது தவறான பயன்பாட்டையும் அனுமதிக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதும் மாநில அரசின் உறுதியான நிலைப்பாடாகும் எனவும் முகமட் ஃபஹ்மி கூறினார்.
முன்னதாகப், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள PJS 4 முஸ்லிம் கல்லறையை ஆக்கிரமித்தவர்கள் மார்ச் 31க்குள் அந்த இடத்தை காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டதாக JAIS இயக்குநர் டத்தோ முகமட் ஷாஜிஹான் அகமட் தெரிவித்தார். உத்தரவு பின்பற்றப்படாவிட்டால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


