ஷா ஆலாம், மார்ச் 2- கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 2,218 ஆதரவற்ற குழந்தைகளுக்கு, எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு யாசான் இஸ்லாம் டாருல் எஹ்சான் (YIDE) அமைப்பு மொத்தம் ரிம332,700 நிதி உதவியை வழங்கியுள்ளது.
இந்த ரமலான் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது தொடர் நிகழ்வான இத்திட்டம் குறித்து, கம்போங் ராஜா ஊடா பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் டான் ஸ்ரீ மஸ்லான் மன்சோர் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்துகொண்ட 679 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தலா ரிம150 வீதம் மொத்தம் ரிம101,850 நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்விற்கு வர இயலாத 1,470 அனாதைக் குழந்தைகளுக்கும் அதே அளவிலான தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுவதை உறுதி செய்ய வெ 220,500 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டுக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஹரிராயா நன்கொடை வழங்கும் இவ்விழாவில் சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா அவர்கள் நேரில் வருகை தந்து சிறப்பித்தார்.
இந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதிலும் உள்ள 12,470 அனாதைக் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் YIDE அமைப்பு மொத்தம் ரிம1.87 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த உயரிய திட்டத்தின் மூலம் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளும் விடுபடாமல் உதவி பெறுவதை தாங்கள் உறுதி செய்துள்ளதாக டான் ஸ்ரீ மஸ்லான் மன்சோர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.







