கோலாலம்பூர், 2 மார்ச்: தகுதியுள்ள பயனாளிகளுக்கான மாதாந்திர ரஹ்மா அடிப்படை உதவித்தொகை, இன்று முதல் அவர்களின் அடையாள அட்டையில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ரஹ்மா ரொக்க உதவி (STR) பெறும் பிரிவினரில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 ரிங்கிட்டும், முதியவர்கள் மற்றும் தனிநபர் பிரிவினருக்கு 50 ரிங்கிட்டும் வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேவேளையில், STR மற்றும் eKasih ஆகிய இரு பிரிவுகளிலும் பதிவுபெற்ற பயனாளிகளில், குடும்பங்களுக்கு 200 ரிங்கிட்டும், முதியவர்களுக்கு 150 ரிங்கிட்டும், தனிநபர் பிரிவினருக்கு 100 ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான சாரா அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, இந்தப் பயனாளிகள் பணமில்லா பரிவர்த்தனை முறையில் தங்களின் மைக்காட் கணக்கு மூலம் தானாகவே அடிப்படைத் தேவைகளுக்கான உதவியைப் பெறுவார்கள். நாடு முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில், அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை இந்த மைக்காட் வசதியைப் பயன்படுத்தி அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். 2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், வாழ்க்கைச் செலவின உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விளிம்புநிலை மக்களின் பொருளாதாரத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.






