கோலாலம்பூர், மார்ச் 2:மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் பொதுமக்களுக்காக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த காலக்கட்டத்தில் நேரில் வழங்கப்படும் தூதரகச் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அவசர கால ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காகத் தூதரகக் குழுவினர் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் பதற்றமான பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக அந்த அறிக்கை விளக்குகிறது.
தூதரகச் சேவைகள் தேவைப்படும் மலேசியர்கள் எந்நேரமும் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வசதியாகத் தனிப்பட்ட தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி, மேலதிக உதவிகள் தேவைப்படும் மலேசியப் பிரஜைகள் +971 50 614 6894 என்ற தொலைபேசி எண்ணின் வாயிலாகத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மின்னஞ்சல் வழியாக உதவி கோர விரும்புவோர் mwabudhabi@kln.gov.my என்ற முகவரிக்குத் தங்கள் கோரிக்கைகளை அனுப்பலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலேசியத் தூதரகம் மீண்டும் திறக்கப்படும் வரையிலான இந்தக் காலக்கட்டத்தில், அங்குள்ள மலேசியர்கள் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.







