ஷா ஆலாம்: அம்பாங் ஹிலீர் பகுதியில் வெளிநாட்டினருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் ஐந்து வணிக வளாகங்கள் மற்றும் சாலையோரக் கடைகளை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (MPAJ) நேற்று பறிமுதல் செய்தது.
உரிமம் இல்லாமல் வணிகம் செய்தது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக உள்ளூராட்சி மன்றத்தின் (PBT) அமலாக்கத் துறையால் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக எம்பிஏஜே தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
"எம்பிஏஜே நிர்வாகப் பகுதியில் உள்ள வணிக நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டு இயங்குவதையும், பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"ஒழுங்கான, உரிமம் பெற்ற மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வணிகச் சூழலை உறுதி செய்வதற்காக, எம்பிஏஜே அவ்வப்போது கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புகார்களை https://mpaj.spab.gov.my என்ற SISPAA MPAJ இணையதளம் மூலமாகவோ அல்லது 1-800-22-8100 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் எம்பிஏஜே கூறியுள்ளது.
நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும், சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக வளாகங்கள், சில்லறைக் கடைகள் மற்றும் உணவகங்கள் உட்பட எந்தவொரு உரிமத்திற்கும் வெளிநாட்டினர் விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையோர வியாபாரிகள் தொடர்பான துணைச் சட்டங்கள் (UUK) மற்றும் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில் துறைக்கான துணைச் சட்டங்களின் கீழ் இந்த அமலாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
மலேசியாவில், வெளிநாட்டு நிறுவனங்கள் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (sendirian berhad), கூட்டாண்மை (perkongsian) அல்லது பிரான்சைஸ் பங்குதாரராக மட்டுமே பெரிய அளவிலான சில்லறை வணிகங்களைத் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.








