கூலாய், பிப் 26- கூலாய், செங்காங் தொழில்பேட்டையில் உள்ள ரப்பர் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மேலும் மூன்று பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுவதாகூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், ஏற்கனவே மூடப்பட்ட செங்காங் சீனப்பள்ளி (SJKC Sengkang) மற்றும் கூலாய் பெசார் சீனப்பள்ளி (SJKC Kulai Besar) ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பள்ளிகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.
கூலாய் மாவட்ட கல்வி அலுவலகத்தின் (PPD) தகவல்படி, புதிதாக மூடப்பட்ட மூன்று பள்ளிகள் தாமான் கோத்தா கூலாய் தேசியப்பள்ளி, தாமான் கோத்தா கூலாய் 2 தேசியப்பள்ளி மற்றும் தாமான் கோத்தா கூலாய் மதப்பள்ளி ஆகும்.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை வரை வீட்டிலிருந்தே கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறையில் பாடங்களை மேற்கொள்வார்கள் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, சம்பந்தப்பட்ட பகுதிவாசிகள் அவ்வப்போது அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விழிப்புடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், விபத்து நடந்த இடத்தில் இதுவரை அபாயகரமான மாசுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், அப்பகுதியின் காற்றின் தரம் கவலைப்படும் வகையில் இல்லை என்றும் சுற்றுச்சூழல் துறை (JAS) தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சூழல் துறை தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






