சிரம்பான், ஏப்ரல் 15 – பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு (PIBG) வழங்க வேண்டிய நன்கொடை தொகையைச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மாணவர்களின் சான்றிதழ்கள் அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பள்ளிகள் நிறுத்தி வைக்கக் கூடாது என நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் துறை (JPNS) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கான பங்களிப்பு என்பது முற்றிலும் ஒரு தன்னார்வச் செயலாகும் என்றும், அதனை மாணவர் தொடர்பான எந்தவொரு நிர்வாக நடைமுறைகளுக்கும் நிபந்தனையாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.
"ஒரு மாணவரின் சான்றிதழ் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக டிக்டாக் தளத்தில் பரவிய காணொளி எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
“இவ்விவகாரத்தை கல்வித் துறை தீவிரமாகக் கருதுகிறது. மேலும் துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களைப் பெறுவதற்காக உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணைக்கு இடம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் இது குறித்து எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அனைத்து பள்ளி நிர்வாகிகளும் வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் எப்போதும் பின்பற்றுவதை உறுதிசெய்ய, கண்காணிப்பு அம்சங்களை வலுப்படுத்தி, நினைவூட்டல்களை வழங்கும் என்று JPNS உறுதியளித்துள்ளது.
இது நேர்மையான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நலனை மையமாகக் கொண்ட கல்வி முறையின் நோக்கத்திற்கு இணங்க உள்ளது.
நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவருக்கு, பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டண நிலுவை காரணமாக, அதிகாரப்பூர்வ சான்றிதழ் இல்லாமல் காலி உறை மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அவருக்கான பரிசுத் தொகையும் பள்ளியால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் டிக்டாக் பயனர் ஒருவர் பகிர்ந்த காணொளி பரவலானது குறிப்பிடத்தக்கது.








