கோல சிலாங்கூர் மக்களுடன் சுல்தான் நோன்பு துறப்பு; 529 பேருக்குப் பெருநாள் அன்பளிப்பு வழங்கிச் சிறப்பிப்பு

25 பிப்ரவரி 2026, 8:37 AM
கோல சிலாங்கூர் மக்களுடன் சுல்தான் நோன்பு துறப்பு; 529 பேருக்குப் பெருநாள் அன்பளிப்பு வழங்கிச் சிறப்பிப்பு

கோல சிலாங்கூர், பிப் 25 - சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் இன்று கோல சிலாங்கூரில் உள்ள சுல்தான் இப்ராஹிம் ஜாமே பள்ளிவாசலில் நடைபெற்ற மக்கள் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் சிலாங்கூர் பட்டத்து இளவரசர் மற்றும் மந்திரி புசாருடன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்தச் சிறப்பான நிகழ்வில், கோல சிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த 149 ஃபகீர்கள், 239 ஏழைகள் மற்றும் 141 முவல்லாஃப்கள் என மொத்தம் 529 பேருக்கு தலா 500 ரிங்கிட் வீதம் மொத்தம் 264,500 ரிங்கிட் மதிப்பிலான பெருநாள் அன்பளிப்பை மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்கள் நேரில் வழங்கினார்.

சுகாதார அமைச்சரும் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட் உள்ளிட்ட மாநில முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், சுல்தான் அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து நோன்பு துறந்து மகிழ்ந்தார்.

நோன்பு துறப்பிற்குப் பின், சுல்தான் அவர்கள் அங்கிருந்த மக்களுடன் இணைந்து மஃரிப், இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளை மிகுந்த பக்தி உணர்வுடன் நிறைவேற்றினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சுல்தான் இப்ராஹிம் ஜாமே பள்ளிவாசலானது, சிலாங்கூரின் இரண்டாவது சுல்தானின் நினைவாகக் கட்டப்பட்டு, தற்போதைய சுல்தானின் தந்தையாரால் கடந்த 1987-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

கோல சிலாங்கூர் நகரின் மையப்பகுதியில் 42,986 சதுர அடி பரப்பளவில் கம்பீரமாக அமைந்துள்ள இப்பள்ளிவாசல், ஒரே நேரத்தில் 2,500 பேர் வரை தொழுகை நடத்தும் வசதியைக் கொண்டு மாவட்டத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.