ஷா ஆலம், பிப் 23: ரவாங், பண்டார் தாசிக் புத்ரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) அதிகாரிகள் மீது மோட்டார் சைக்கிளோட்டிகள் பட்டாசுகளை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அநாகரீகமானச் செயல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளியை சிலாங்கூர் ஜேபிஜே இயக்குனர் அஸ்ரின் போர்ஹான் உறுதிப்படுத்தியதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாகப் போலீசில் புகார் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், லத்தார் (LATAR) நெடுஞ்சாலையில் சீனப் புத்தாண்டுக்கான விசேட நடவடிக்கையின் போது, தலைக்கவசம் அணியாத மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிடிபட்ட அந்த நபர் முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனக் காப்புறுதி இன்றிச் செயல்பட்டதற்காகச் சம்மன் வழங்கப்பட்ட வேளையில், அங்கிருந்த மற்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் திட்டமிட்டு அதிகாரிகள் மீது பட்டாசுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் அதிகாரிகளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், கடமையில் இருந்த அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் இத்தகையச் செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என ஜேபிஜே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.







