கோலாலம்பூரில் சட்டவிரோதக் கிளினிக்குகள்: அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

20 பிப்ரவரி 2026, 4:19 AM
கோலாலம்பூரில் சட்டவிரோதக் கிளினிக்குகள்: அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

கோலாலம்பூர், பிப் 20 - தலைநகரில் சட்டவிரோதமாக செயல்படும் கிளினிக்குகள் குறித்து மலேசிய மருத்துவச் சங்கம் (MMA) கவலை வெளிபடுத்தியுள்ளது.

அந்த கிளினிக்குகளில் போலி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கி வருவதாகவும், இது பொதுமக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் MMA தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜு எச்சரித்தார்.

இத்தகைய கிளினிக்குகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் தவறான நோயறிதல், பாதுகாப்பற்ற சிகிச்சை முறைகள், போலி அல்லது கடத்தப்பட்ட மருந்துகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புண்டு.

அண்மையில், குடிநுழைவுத் துறை ஜாலான் துன் தான் சியு சின் பகுதியில் 9 சட்டவிரோதக் கிளினிக்குகளில் சோதனை நடத்தியது.

அந்நடவடிக்கையில் 17 வங்காளதேசிகள் 1 மியன்மார் நாட்டவர் என 18 பேர் கைதுச் செய்யப்பட்டனர். அவர்கள் மீது வேலை அனுமதிகளை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாதது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அந்த போலி கிளினிக்குகளில் மன அழுத்தக் குறைப்பு மாத்திரைகள், நாட்பட்ட நோய்க்கான சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட பல கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

"மலேசியாவில் உள்ள ஒவ்வொரு நோயாளிக்கும் பாதுகாப்பான, முறையான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும். அதற்காக அடிக்கடி சோதனை, கடுமையான தண்டனை மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம்" என திருநாவுக்கரசு வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.