புத்ராஜெயா, பிப் 19: பாதுகாப்புப் படையினரின் வசதிக்காகப், பழுதடைந்த இராணுவ மற்றும் காவல்துறை தங்குமிடங்களை மேம்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தற்போது விவாதிக்கப்பட்டு வரும் திட்டங்களின் கீழ், சில தங்குமிடங்களைச் சீரமைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
"காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்களில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், இனி இதில் அதிக கவனம் செலுத்துவோம். மிகவும் பழுதடைந்த இராணுவ, காவல்துறை தங்குமிடங்களைச் சீரமைப்பதற்காகக் கடந்த ஆண்டுகளில் 1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள உள்துறை அமைச்சில் நடைபெற்ற உள்துறை அமைச்சுப் பணியாளர்களுடனான சந்திப்பு மற்றும் இஹ்யா ரமலான் நிகழ்விற்குப் பிறகு பிரதமர் அன்வார் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தனது உரையில், சைஃபுடின் நசுத்தியோன், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இப்பணிகளுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பரிசீலிக்குமாறு கருவூலத்தின் தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு ஒரு தரப்பினரை மட்டும் சார்ந்தது அல்ல என்று அன்வார் வலியுறுத்தினார்.
"நாட்டை உருவாக்கும் பொறுப்பு ஒரு தரப்பினரிடம் மட்டும் இல்லை. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது காவல்துறையின் பொறுப்பு என்று சிலர் கூறுகிறார்கள், அது சரியல்ல. இது அனைவரின் பொறுப்பாகும்," என்றார்.
"இந்த ரமலான் மாதத்தை நம்மைச் சீர்திருத்திக்கொள்ளவும், நமது செயல்திறனை மேம்படுத்தவும், நம்மிடம் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, இந்த நாடு மேலும் சீராக இயங்குவதை உறுதிசெய்ய உழைப்போம்," என்று அவர் கூறினார்.
மலேசிய அரச காவல்துறை, குடிநுழைவுத் துறை, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களின் வேகம் மற்றும் செயல்திறனுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இருப்பினும், அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.
"இதுவரையிலான உங்களின் செயல்திறனைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன், ஆனால் நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்வோம். தரம் தாழ்ந்துவிட வேண்டாம்," என்றார் அவர்.


