அரசாங்க அதிகாரிகள் மீதான புகார்கள் சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் - அன்வார்

19 பிப்ரவரி 2026, 7:14 AM
அரசாங்க அதிகாரிகள் மீதான புகார்கள் சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் - அன்வார்

புத்ராஜெயா, பிப். 19 – எந்தவொரு அரசாங்க அதிகாரி அல்லது அரசு நிறுவனத்திற்கு எதிரான புகார்களும் அல்லது நடவடிக்கைகளும் சட்டத்தின் அடிப்படையிலும், முழுமையான விசாரணை செயல்முறையின் மூலமும் எடுக்கப்பட வேண்டுமே தவிர, விசாரணையின்றி தண்டனை வழங்குவதாகவோ அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவோ இருக்கக்கூடாது.

 ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் முறை சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும், உண்மையான புகார்களாக இருந்தால், அவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கையாள்வதைப் போல நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு முறைப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

 "பல ஆண்டுகளாக அனைத்து அரசு நிறுவனங்களிலும் கடினமாக உழைக்கும் சகோதர சகோதரிகள், அவர்களிடம் தீவிரமான பலவீனங்கள் இருந்தால், நாம் அவர்களைத் திருத்துவது நியாயமானதே. தவறுகளை நாம் சரிசெய்ய வேண்டும். ஆனால், அனைத்தும் மோசமாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நாம் ஏற்படுத்தக்கூடாது," என்றார் அவர்.

உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டம் மற்றும் இஹ்யா ரமலான் நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றும் போது  இவ்வாறு கூறினார்.

 இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசரா, தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் நிதித்துறை தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, ஒரு நிதிச் சேவை நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பதாகப் புளூம்பெர்க் தனது முந்தைய அறிக்கையில் கூறியிருந்தது.

 இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒரு நிதிச் சேவை நிறுவனத்தில் தாம் வைத்திருந்த RM800,000 மதிப்புள்ள பங்குகள் வெளிப்படையாகவும், நடைமுறைக்கு ஏற்பவும் வாங்கப்பட்டதாக அசாம் பாக்கி தெரிவித்திருந்தார்.

 அசாம் பாக்கியை உடனடியாகப் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டிய அவசரத் தேவை இல்லை என்றும், முதலில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவிடம் இப்பொறுப்பை ஒப்படைப்பதாகவும் பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

 அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தார் தலைமையிலான இக்குழுவில், பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ வான் அஹ்மட் டஹ்லான் அப்துல் அசிஸ் மற்றும் நிதித்துறை தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

 தனது உரையில், விரிவான விசாரணைக்கு முன்பே தண்டிக்கும் செயல் நியாயமற்றது என்று அன்வார் குறிப்பிட்டார்.

"பல்லாண்டுகளாக தியாகம் செய்துள்ள அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்தவர்கள், சட்ட செயல்முறையைப் பின்பற்றுங்கள். கடுமையான புகார்கள் இருந்தால், அதை உரிய செயல்முறைக்குக் கொண்டு வாருங்கள்."

"விசாரணைக்கு முன்பே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வழியை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். நமக்கு பிடிக்காதவராகவோ அல்லது நமது குழுவைச் சேராதவராகவோ இருப்பதால் நாம் அவசரப்பட வேண்டாம்."

"அல்லது நம்முடன் தொடர்புடைய குழுக்கள் மீது நடவடிக்கை எடுத்தவர் என்பதால் நாம் பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கக்கூடாது. குறிப்பாக இந்த ரமலான் மாதத்தில் நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.