கோலாலம்பூர், பிப் 19 - பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் புருணைக்கான மலேசியாவின் முன்னாள் உயர் ஆணையரான டத்தோ சலீம் ஹாஷிம் (76), புதன்கிழமை காலமானார்.
அதிகாலை சிலாங்கூர், செர்டாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா மருத்துவமனையில் அவர் காலமானார் என அவரது மருமகன் டத்தோ டாக்டர் ஹிஷாம் ஷா முகமட் இப்ராஹிம் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயா, பிரிசின்க் 20-இல் உள்ள இஸ்லாமிய கல்லறையில் சலீமின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. வெளியுறவு அமைச்சும், சமூக ஊடகப் பதிவில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
ஜோகூர், சிகாமட்டில் பிறந்த சலீம், மலேசியாவின் அரசதந்திர சேவைக்கு ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
1973-இல் வெளியுறவு அமைச்சில் உதவிச் செயலாளராகச் சேர்ந்த சலீம், அரசதந்திர சேவையில் ஒரு நீண்ட மற்றும் சிறப்பான பங்களிப்பைக் கொண்டிருந்தார்.
அவர் 1994 முதல் 1997 வரை புருணைக்கான உயர் ஆணையராகவும், அதைத் தொடர்ந்து 1997 முதல் 2001 வரை சிங்கப்பூருக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றினார்.
பின்னர், 2001 முதல் 2002 வரை பிரிட்டனுக்கான உயர் ஆணையராகவும், 2005 முதல் 2007 வரை ஆஸ்திரேலியாவுக்கான உயர் ஆணையராகவும் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா


