போலீஸ் கார்களில் டாஷ் போர்டு கேமராக்களைப் பொருத்த JSPT பரிந்துரை
பாகான் செராய்: அனைத்து போலீஸ் கார்களிலும் டாஷ்போர்டு கேமராக்களைப் பொருத்தும் பரிந்துரை, களத்தில் அமலாக்கப் பணிகளை எளிதாக்கும் நோக்கில் விரைவில் தேசிய போலீஸ் தலைவரிடம் முன்வைக்கப்படும்.
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் (JSPT) இயக்குனர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி கூறுகையில், இந்த வசதி கண்காணிப்பை மேம்படுத்துவதோடு, ஒவ்வொரு சம்பவத்தையும் மிகவும் விரிவாகப் பதிவுசெய்து மதிப்பிட காவல்துறைக்கு உதவும் என்றார்.
"இந்தப் பரிந்துரை ஒரு சிறந்த நடவடிக்கையாகும். சாலைப் பயனர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் அல்லது பிற சம்பவங்களுக்கான காரணத்தைக் கண்டறிய இது எங்களுக்கு உதவும்.
"இந்த முறை, சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து பொதுமக்களுக்குக் கற்பிக்கவும், அதன் மூலம் சாலை விபத்து விகிதத்தைக் குறைக்கவும் உதவும்," என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள குனுங் செமங்கோல் ஓய்வு மற்றும் உபசரிப்பு (R&R) நிலையத்தில், 2026 சீனப் புத்தாண்டு ஓப்ஸ் செலாமாட் 25 நடவடிக்கையை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, போக்குவரத்து அமலாக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து சாலைப் பயனர்களுக்கும் டாஷ்போர்டு கேமராக்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை புக்கிட் அமான் JSPT பரிசீலித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஓப்ஸ் செலாமாட் 25 குறித்து மேலும் பேசிய முஹம்மது ஹஸ்புல்லா, பிப்ரவரி 15 முதல் 20 வரை நடைபெறும் இந்த நடவடிக்கையில் 3,609 JSPT உறுப்பினர்களும், குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் (JPJKK) 6,132 உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் 25 ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் 46 அபாயகரமான கறுப்புப் பகுதிகளில் (பிளாக்ஸ்பாட்) சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப் படும் என்றும், கூட்டரசு, மாநில மற்றும் நகராட்சி சாலைகளில் 407 ஹாட்ஸ்பாட் பகுதிகளிலும் 76 கறுப்புப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
"இந்த பண்டிகைக் காலத்தில், அனைத்து சாலைப் பயனர்களும் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, JSPT-யின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிரப்படும் சமீபத்திய தகவல்களைத் தொடர்ந்து பார்க்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.
"இந்த முறை, போக்குவரத்துப் பிரச்சனைகளைக் கையாள சுகாதார அமைச்சு, சாலைப் போக்குவரத்துத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை போன்ற பிற துறைகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா



