கோலாலம்பூர், பிப் 16: நாட்டின் பல்லின மக்களிடையே நீண்ட காலமாகப் பின்னப் பட்டிருக்கும் நல்லுறவையும் நம்பிக்கையையும் உணர்ச்சிகள், தூண்டுதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் சிதைத்துவிட அனுமதிக்க வேண்டாம் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டியுள்ளார்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்வார், இருக்கும் வேறுபாடுகளை நல்லிணக்க உணர்வை வலுப்படுத்தவும், தப்பெண்ணங்களை நிராகரிக்கவும், மேலும் சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக கலந்துரையாடல், பேச்சுவார்த்தை மற்றும் விவேகத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
"சீனப் புத்தாண்டு, முழு நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான வளம், நம்பிக்கை மற்றும் வலிமையை நமக்கு எப்போதும் நினைவூட்டுகிறது. இந்தக் குதிரை ஆண்டில், விடாமுயற்சி, தைரியம், போராட்ட குணம் ஆகியவைகளை கொண்டாடப்படும் அதே வேளையில், விவேகத்துடனும் எளிமையுடனும் செயல்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது."
"மனிதர்கள் ஒருவரையொருவர் மதித்து புரிந்து கொள்ளும்போது நல்லிணக்கம் பிறக்கிறது என கன்பூசியஸ் நமக்கு நினைவூட்டுகிறார். வெவ்வேறு கலாச்சாரப் பின்னணிகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தாலும், பல்லின சமூகம் அமைதியாக ஒன்றிணைந்து வாழ இதுவே அடித்தளமாக அமைகிறது," என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் கருணை ஆகியவை நமது கூட்டுப் பிடிப்பாக இருக்கும் வரை மலேசியா தொடர்ந்து வலிமையுடன் முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அன்வார் வெளிப்படுத்தினார். மேலும், அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற அவர் வாழ்த்தினார்.


