மலாக்கா, பிப். 17 - அனைவருக்குமான 'ரஹ்மா அடிப்படை உதவித்திட்டம் (சாரா)' மூலம் கிடைக்கும் 100 வெள்ளி ஒரு சிறிய தொகையாகத் தோன்றலாம். ஆனால், அதன் அருமையை அறிந்தவர்களின் கைகளில், உதவி தேவைப்படும் மற்றவர்களுக்கு ஒளியாக மாறுகிறது.
கோத்தா லக்ஸமனாவைச் சேர்ந்த ரசியா இஸ்மாயில், 40, தமக்குக் கிடைத்த அந்த உதவியை அரிசி, முட்டை, சமையல் எண்ணெய், சீனி, மீஹூன் மற்றும் பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சிறந்த முறையில் பயன்படுத்தினார். ஆனால், அவை அவருக்காக அல்ல; வசதி குறைந்த ஒரு குடும்பத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
"கடந்த ஆண்டு கிடைத்தது போலவே, இந்த முறையும் எனக்குக் கிடைத்த உதவியை தேவைப்படும் ஒரு குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கினேன்," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
கிடைத்த உதவிக்குத் தாம் நன்றியற்றவர் அல்ல, ஆனால் தனியார் துறையில் பணிபுரியும் தமக்குக் கிடைக்கும் வருமானம் போதுமானது என்றும், தம்மை விட அதிக தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றும் ரசியா கூறினார்.
"என்னைச் சுற்றி இன்னும் பற்றாக்குறையுடன் வாழும் மக்கள் இருப்பதை நான் அறிவேன். அவர்களுக்கும் இந்த உதவி கிடைத்திருந்தாலும், நான் கொடுக்கும் இந்தப் பொருட்கள் ஒரு கூடுதல் கையிருப்பாக இருக்கும், குறிப்பாக வரவிருக்கும் ரமலான் மாதத்தில். இதுவே நான் அருளைப் பகிர்ந்துகொள்ளும் வழியாகும்," என்றார் அவர்.
செமாபோக்கில் வசிக்கும் துரித உணவக ஊழியரான சுசானா சுலைமான், 30, இரண்டாவது முறையாகக் கிடைத்த இந்த 'சாரா' உதவியை, குறிப்பாக நோன்பு மாதம் நெருங்கும் வேளையில், மிகுந்த நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்.
தாமும் தனது மற்ற நான்கு உடன்பிறப்புகளும் இந்த உதவியைப் பயன்படுத்தி புக்கிட் செரிண்டிட்டில் உள்ள தங்களின் தாயார் வீட்டிற்குத் தேவையான அரிசி, எண்ணெய் மற்றும் சீனி போன்ற பொருட்களை வாங்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
"நோன்பு மாதத்திற்கு முன்பு இரண்டாவது முறையாக 'சாரா' உதவி கிடைத்துள்ளது. நோன்பு காலத்தில் நாங்கள் பொதுவாக அம்மாவின் வீட்டில்தான் சமைத்து நோன்பு துறப்போம். அதனால், வீட்டுக்குத் தேவையான சமையல் பொருட்களை வாங்க இது உதவியாக இருக்கும்," என்றார் அவர்.
பாண்டா ஹிலிரில் தனிமையில் வசிக்கும் லீ ஆ ஹோக், 56, சீனப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இந்த 'சாரா' உதவி மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என்றார்.
"சிலர் 100 வெள்ளி என்பது பெரிய தொகை இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் என்னைப் பொறுத்தவரை, அதில் நிறைய பொருட்களை வாங்க முடியும். தனியாக வாழும் எனக்கு அதிக உணவு தேவைப்படாது. அரிசி, எண்ணெய், முட்டை இருந்தால் போதும்," என்றார் அவர்.
இதற்கிடையில், புக்கிட் பாருவைச் சேர்ந்த ஜோய்ஸ் டீ, 18, முதன்முறையாக இந்த உதவியைப் பெறுவதாகவும், தனது தாயாரின் குடும்பச் செலவுகளைச் சற்று குறைக்க உதவும் வகையில் சமையல் பொருட்களை வாங்க இந்தத் தொகையைப் பயன்படுத்தப் போவதாகவும் கூறினார்.
"எனக்காக எதையும் வாங்க விரும்பவில்லை. சிறிய தொகையாக இருந்தாலும், அம்மாவின் சுமையைக் குறைக்க உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி," என்றார் அவர்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் 100 வெள்ளி 'சாரா' உதவி, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த உதவியை மைக்காடு பயன்படுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 8.1 மில்லியன் பங்கேற்பாளர்கள் இந்த உதவியைப் பெற்றுள்ளதாகவும், இதன் மொத்தச் செலவு சுமார் 780 மில்லியன் வெள்ளி என்றும் நிதியமைச்சு II அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
-- பெர்னாமா


