ஷா ஆலாம்: இந்த ஆண்டின் 5-வது தொற்றுநோயியல் வாரத்தின்படி, புதிதாக 503 காசநோய் (டிபி) சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்வழி, நாடு தழுவிய மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, சபா மாநிலத்தில் ஆக அதிகமாக 614 சம்பவங்கள் (23.88%) பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து சிலாங்கூரில் 476 சம்பவங்களும் (18.51%), சரவாக்கில் 257 சம்பவங்களும் (10%) பதிவாகியுள்ளன.
பிற மாநிலங்களான ஜொகூரில் 233, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 202, பினாங்கில் 148, கெடாவில் 144 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பேராக்கில் 127, கிளாந்தானில் 96, பகாங்கில் 81, திரங்கானுவில் 60, நெகிரி செம்பிலானில் 58, மலாக்காவில் 42, பெர்லிஸில் 17 மற்றும் லபுவானில் 16 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.
வரவிருக்கும் பண்டிகைக் காலம் மற்றும் நீண்ட விடுமுறை-களைக் கருத்தில் கொண்டு, காசநோய் பரவுவதைத் தவிர்க்க அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
"மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவரி அணிவதுடன், இருமல் மற்றும் தும்மும்போது சரியான சுகாதார முறையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
"நீண்டகால இருமல், காய்ச்சல், பசியின்மை அல்லது உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்."
தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க, சுய இடர் மதிப்பீடு மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.








