பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்தபோது குப்பைகளைச் சட்டவிரோதமாகக் கொட்டிய பெண்ணுக்கு கிள்ளான் அரச மாநகரசபை (MBDK) ரிம1,000 அபராதம் விதித்தது.
கிள்ளான் துறைமுகம், ஜாலான் தெங்கு பாடார் அருகே உள்ள சாலையோரத்தில், தனது வீட்டிலிருந்து சுமார் 140 மீட்டர் தொலைவில் சிவப்பு பத்திகள், மர வெட்டுப்பலகை மற்றும் சமையலறைப் பொருட்கள் உட்பட பல பொருட்களை அப்பெண் கொட்டியுள்ளார்.
குப்பைக் குவியலின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் சேவைகள் துறையின் அமலாக்க அதிகாரிகள் குற்றவாளியைக் கண்டு பிடித்ததாக MBDK- நகராண்மைக்கழகத்தின் தொடர்புத் துறை இயக்குநர் நோர்ஃபிசா மஹ்ஃபிஸ் தெரிவித்தார்.
"சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், அந்தப் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்தனர். பின்னர், சட்டவிரோதமாகப் பொருட்களை வீசிய குற்றவாளியை அடையாளம் கண்டனர். அவரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்," என்று 'தி ஸ்டார்' நாளிதழ் செய்திக்கு மேற்கோள் காட்டி அவர் கூறினார்.
குப்பைகளைச் சேகரித்தல், அகற்றுதல் மற்றும் கழிவு மேலாண்மை தொடர்பான துணைச் சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு சமரசமின்றி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்த இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, தவறினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
"இந்த அபராதம், குடிமைப் பொறுப்பை மீறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்பதற்கு ஒரு பாடமாக அமையும் என நம்புகிறோம். குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில், பழைய தளபாடங்கள், காலணி அடுக்குகள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் போன்ற பெரிய அளவிலான கழிவுகளை அகற்றுவதில் KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) தூய்மைப் பணியாளர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்," என்று அவர் கூறினார்.
சேதமடைந்த மரத்தாலான தளபாடங்கள் மற்றும் பழைய மெத்தைகளை மக்கள் எரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதோடு, இந்தக் கழிவுகளைச் சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த 500 கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று MBDK-யின் சுற்றுச்சூழல் சேவைகள் துறை இயக்குநர் ஜைரீசால் அஹ்மத் ஜைனுடின் தெரிவித்தார்.
"சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுபவர்களை அடையாளம் காண சிசிடிவி பதிவுகள் உதவும். தங்கள் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்படுவது குறித்து எங்களுக்குத் தகவல் அளிக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம்," என்றார்.
அமைதியான சாலைகள், பின்புறச் சந்துகள் மற்றும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் இதுபோன்ற பெரிய கழிவுகள் பெரும்பாலும் கொட்டப்படுவதாக அவர் கூறினார்.
"கிள்ளான் தூய்மைப் பிரச்சாரம் 2026-இன் கீழ், சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுவதை ஒழிக்க MBDK கடுமையாகச் செயல்படும், மேலும் அதிகபட்ச தண்டனை விதிக்கப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.
2025-ஆம் ஆண்டு முழுவதும், கழிவு மேலாண்மை துணைச் சட்டத்தின் கீழ் MBDK 206 அபராதங்களை விதித்தது, அதன் மொத்த மதிப்பு சுமார் ரிம207,850 ஆகும். கடந்த மாதம் மட்டும், சட்டவிரோதமாகக் குப்பை கொட்டிய குற்றத்திற்காக ரிம15,000 மதிப்புள்ள 15 அபராதங்கள் விதிக்கப்பட்டன.


