கோலாலம்பூர், பிப் 13 - மக்களின் நலனை மையமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம், கிளந்தான் உட்பட ஒவ்வொரு மாநிலத்திற்கும் தகுந்த கவனம் அளிக்கப்படுவதை மடாணி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கிளாந்தான் மந்திரி புசார் டத்தோ முகமட் நசுருடின் டாட், நேற்று தமது அலுவலகத்தில் தம்மை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள், குறிப்பாகக் கிளந்தான் மக்களுக்கு உதவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.
"வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அத்துடன் நியாயமான மற்றும் சமச்சீரான வளர்ச்சியை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
"மக்களின் நலன்களையும், அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் கிளந்தான் உட்பட ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய கவனம் செலுத்தப்படுவதை மடாணி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும்," என்று அவர் இன்று ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
மற்றொரு பதிவில், பினாங்கு யாங் டி பெர்துவா நெகிரி துன் ராம்லி ங்கா தாலிப் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் ராஜா நூரா அஷிகின் ராஜா அப்துல்லா ஆகியோரை பிரதமர் நேற்று மாலை ஸ்ரீ பெர்டானாவில் ஒரு தேநீர் விருந்தில் சந்தித்தார்.
நிதி அமைச்சருமான அன்வார், இந்த சந்திப்பு நீண்ட காலமாக நிலவி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தியதாகவும், பினாங்கின் வளர்ச்சிப் போக்கு குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு தளமாகவும் அமைந்ததாகவும் கூறினார்.
மக்களின் நலன் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக அந்த மாநிலத்தின் திறன் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.


