புத்ராஜெயா, பிப் 13 - மலேசிய இந்திய திறன் முயற்சி (MiSI) 2.0 திட்டம் மீண்டும் செய்யப்படுவதுடன், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் இரட்டிப்பாக்கப்பட்டு வெற்றி மடாணி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய இளைஞர்களுக்கான திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள், குறிப்பாக B40 சமூகத்தினருக்கான வாய்ப்புகள், விரிவடையும்.
MiSI 2.0 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார். பயிற்சியை முடித்த பிறகு பங்கேற்பாளர்கள் RM3,000 முதல் RM7,500 வரை போட்டித்தன்மை வாய்ந்த சம்பள சலுகைகளைப் பெற்றனர் என்றார்.
“தற்போது, Talent Corp மூலம் RM4 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. .
“இந்த ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்படும் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன், ஆனால், உண்மையான தேவையை அடையாளம் காண ஒரு விரிவான ஆய்வு நடத்தப்படும்,” என்று ரமணன் கூறினார்.
பயிற்சித் திட்டத்தை முடித்த 300 இந்திய இளைஞர்கள் கலந்து கொண்ட MiSI 2.0 பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
இத்திட்டத்தின் செயல்படுத்தல் அணுகுமுறை எளிமைப்படுத்தப்படுவதால், பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதங்கள், சம்பந்தப்பட்ட துறையைப் பொறுத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
MiSI 2.0 திட்டத்தில் உத்தரவாத வேலை வாய்ப்புகளுடன், இந்திய இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்படும்.


