கூச்சிங், பிப். 13 - லூண்டுவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 18 வயதுடைய பதின்ம வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
காலை 7.12 மணியளவில் சரவாக் பொது மருத்துவமனையின் (HUS) மருத்துவ அதிகாரியிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக லூண்டு மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் சுதிர்மான் கிராம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
"ஆரம்பகட்ட சோதனையில், பாதிக்கப்பட்டவரின் இடது கண் மற்றும் கன்னத்தில் வீக்கம் இருந்ததும், மூக்கில் காய்ந்த இரத்தக் கறைகள் இருந்ததும் தெரியவந்தது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆரம்பகட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர் தனது சக ஊழியர்கள் சிலருடன் ஒரு சமூக ஒன்றுகூடலில் கலந்துகொண்டு மது அருந்தியதாக நம்பப்படுகிறது என்று சுதிர்மான் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்கும் அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக அவர் மேலும் தெரிவித்தார். "சண்டைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் மயங்கி விழுந்ததாகவும், சந்தேக நபரால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும்," அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 29 முதல் 33 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைக்காக ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் பல கைபேசிகளைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் சுதிர்மான் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்த பிறகு தப்பி ஓடியதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அவர் கூறினார். கொலைக் குற்றத்திற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.


