கோலாலம்பூர், பிப் 12 - கடந்த 2023 முதல் 2025 வரை மதிப்பீடு செய்யப்பட்ட 597 திவேட் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும் 1,720 திட்டங்களில், 96 சதவீதம் 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் ``பயனுள்ள திட்டங்கள்`` எனும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இதனை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 70 சதவீத தேசிய இலக்கை விட இந்தச் சாதனை மிக அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"மடாணி அரசாங்கம் செயல்படுத்தி வரும் திவேட் மேம்பாட்டு நடவடிக்கைகள் உண்மையான பலன்களை தருகின்றன என்பதற்கு இதுவே சான்று என அவர் கூறினார்.
"இந்த திட்டம் நமது பட்டதாரிகளை நிலையான, அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழில் பாதையில் கொண்டு செல்வதை உறுதி செய்கிறது," என்று திறன் மேம்பாட்டுத் துறை (JPK) ஏற்பாடு செய்திருந்த '5-நட்சத்திர TVET நிறுவன விருது' வழங்கும் விழாவில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சாதனை, தற்போது 'செயல்திறன் அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டிற்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், சிறந்த முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதே வேளையில், பின்தங்கியுள்ள நிறுவனங்கள் தங்களின் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள உதவிகள் வழங்கப்படும் என்றார்.


