தொழில்துறை ஒத்துழைப்புடன் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்வதில் எஸ்டிடிசி பங்காற்றுகிறது

28 ஏப்ரல் 2026, 6:14 AM
தொழில்துறை ஒத்துழைப்புடன் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்வதில் எஸ்டிடிசி பங்காற்றுகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 28: முன்னணி தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை வலுப்படுத்துவதில் சிலாங்கூர் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (STDC), முக்கியப் பங்காற்றி வருகிறது.

இதில் குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி (TVET) பயின்ற மாணவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இம்மையம் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி, திறமையான இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் மாநில அரசின் இத்தகைய திட்டங்கள் கைகொடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய இளைஞர் நலத்திட்டங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தாலும், அவை இன்னும் உள்ளடக்கியதாகவும், காலத்திற்கேற்ப பொருத்தமானதாகவும் மாற்றப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப இளைஞர்களைத் தயார்படுத்த, இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் கூடுதல் மேம்பாடுகள் செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

மேலும், இளம் தொழில்முனைவோருக்கான திட்டங்களை வடிவமைப்பதிலும், குறிப்பாகச் சந்தைப்படுத்தல் பணிகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சமூக ஊடகச் சந்தைப்படுத்தல், மின்-வணிகம் (e-commerce) மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அடிப்படைத் திறன் பட்டறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இவற்றுடன், அடிமட்ட அளவில் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் சமூகத் திட்டங்கள் சிறிய அளவில் இருந்தாலும், அவை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக நஜ்வான் பாராட்டினார்.

அதேவேளையில், இளைஞர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கில், ஊராட்சி மன்றங்களுடன் (PBT) இணைந்து இணைய மையங்களைக் (Cybercafes) கண்காணிப்பது மற்றும் அங்கு வழங்கப்படும் சேவைகளை மறுஆய்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.