குவாந்தன், பிப்ரவரி 10: ரொம்பின், கோலா ரொம்பினில் உள்ள கம்பூங் ஜெமேரியில் பகாங் சுல்தானுக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விசாரணைக்கு உதவும் வகையில் 21 பழங்குடி மக்களைப் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதில் 26 முதல் 60 வயதுக்குட்பட்ட 17 பெண்களும் அடங்குவர் என்று ரொம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன் ஷெரீப் ஷாய் ஷெரீப் மொண்டோய் தெரிவித்தார். அந்த நிலத்தை மேம்படுத்த நியமிக்கப்பட்டதாகக் கூறும் தரப்பினரிடமிருந்து புகார் வந்ததையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பகாங் சுல்தானுக்குச் சொந்தமான சுமார் 718.281 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட தோட்டப் பகுதியில், ஓராங் அஸ்லி குழுவினர் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இரும்புத் தடுப்புகளைச் சேதப்படுத்தியதோடு, எண்ணெய் பனை மரங்களையும் வெட்டியதாக அந்த நிறுவனத்தின் பிரதிநிதி புகார் அளித்துள்ளார். கைதான அனைவரும் தண்டனைச் சட்டத்தின் 447 மற்றும் 427 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும், ஒரு நிலத்தை மேம்படுத்துவதற்கு முறையான நில உரிமையாளருக்கான ஆவணங்கள் இருப்பது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


