ஷா ஆலம், பிப். 9: மலேசியாவில் தமிழர்களின் கலாச்சாரத்தைப் பராமரித்து வரும் பல கலைகளில் பரதநாட்டியமும் ஒன்றாக உள்ளது. இந்த கலையைக் கடந்த 14 ஆண்டுகளாகக் கற்றுக் கொடுத்து வரும் திருமதி கலைவாணியை மீடியா சிலாங்கூர் பேட்டி எடுத்தது.
உடல் வலிமை பரதக் கலையைக் கற்றுக் கொள்வதில் முக்கியமானது, மேலும் இன்றைய மாணவர்கள் இதை கற்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை அவர் விளக்கினார். இளைய தலைமுறையினர் பயிற்சி நேரத்தில் எளிதில் சோர்வு அடைவதாகவும், இதற்கு, அவர்கள் உடல் அசைவு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் குறைவாக ஈடுபடுவது மற்றும் கைப்பேசியிலேயே அதிக நேரம் செலவிடுவதே காரணம் என அவர் கவலை தெரிவித்தார்.

தன்னிடம் பரதம் கற்றுக் கொள்ளும் வயது முதிர்ந்தோர் செய்யும் உடல் அசைவுகளையும் இளம் மாணவர்கள் செய்ய சிரமப்படுகிறார்கள். இதற்கு சுற்றுச்சூழல் மற்றும் பழக்க வழக்கங்களும் முக்கிய காரணமாக உள்ளன. இந்த பிரச்சனைக்குப் பெற்றோர்கள் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் கலைவாணி குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குச் சரியான உணவு முறையை பழக்கப்படுத்த வேண்டும். இதனால் பரதநாட்டியத்திற்குத் தேவையான உடல் வலிமையை மாணவர்கள் பெற முடியும். கூடுதலாக, பரதநாட்டியத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளை தினமும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதனை பெற்றோர்கள் ஊக்குவித்து, வீட்டில் கண்காணிக்க வேண்டும். இதன் மூலம், தங்கள் பிள்ளைகள் பரதக் கலையில் சிறந்து விளங்குவதை உறுதிசெய்ய முடியும்.
மலேசியாவில் உள்ள கோவில்கள் பரதநாட்டியக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், சிறப்பு பூஜைகள், ஆடிமாதப் பூஜைகள், மஹா சிவராத்திரி, நவராத்திரி போன்ற நிகழ்வுகளில் பரதநாட்டியம் இடம்பெற வாய்ப்பளிக்கப்படுவதாகவும் கலைவாணி விளக்கினார். பெரும்பாலும், கோவில்களில் விசேஷ காலங்களில் பரதநாட்டியம் இல்லாமல் இருப்பது அரிது என அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திற்கு மலேசிய அரசாங்கமும் சிலாங்கூர் அரசாங்கமும் நல்ல வரவேற்பை தருவதாகவும், இந்தியர்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் தொடர்ச்சியாக இடம்பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கலைவாணி தெரிவித்தார். இது இந்தியர்களின் கலாச்சாரத்திற்கு அரசாங்கம் தரும் அங்கீகாரம் என அவர் கருதுகிறார்.
பரதக் கலையை மேலும் விரிவுபடுத்த சிலாங்கூர் அரசாங்கம் துணைபுரிய வேண்டும் என்றும் அவர் கோரினார். சில சமயங்களில் திறமைமிக்க மாணவர்கள் ஏழ்மை காரணமாக இந்த கலையைக் தொடர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற மாணவர்களுக்குக் கட்டணம் கழிவை வழங்கி தன்னால் இயன்ற வரை உதவி வழங்குவதாகவும் கலைவாணி தெரிவித்தார். மேலும், சிலாங்கூர் அரசாங்கம் அல்லது அரசு சாரா நிறுவனங்கள் நிதியுதவி வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவைக் காட்டிலும் பரதநாட்டியக் கலையில் சற்று பின்தங்கி இருக்கும் நாம், இதுபோன்று உதவிகள் மூலம் இலைமறை காயாக இருக்கும் மாணவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வர முடியும் என கலைவாணி நம்பிக்கை தெரிவித்தார். இந்த உதவிகள் அனைத்தும், அதிக நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவர்கள் தங்களின் பரதக் கலையை வளர்த்துக் கொள்ள பெரிதும் துணைபுரியும் என்றார் அவர்.
கடந்த ஆண்டு தனது மாணவர்களின் சிலரை இந்தியாவிற்கு அழைத்து சென்று அங்குள்ள கோவில்களில் பரதநாட்டியம் ஆட ஏற்பாடு செய்துள்ளார். இனி வருங்காலங்களில், தமிழர்கள் வசிக்கும் நாடுகளுக்குத் தனது மாணவர்களை அழைத்து சென்று, பரதநாட்டியத்தில் அவர்களின் திறமைகளை மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் பரப்ப அவர் முயற்சிக்கிறார்.
இதனையடுத்து, இன்னும் 10 வருடங்களில் தனது பள்ளியை விரிவுபடுத்த எண்ணம் கொண்டுள்ளதாகவும், அதிக மாணவர்களுக்கு இந்த கலையைக் கற்றுக்கொடுக்க பல திட்டங்களை வகுத்து வருவதாகவும் கலைவாணி பகிர்ந்து கொண்டார்.


