இளம் தலைமுறையினருக்குத் தமிழ் மரபைக் கற்றுத் தரும் பரதநாட்டியம்

8 பிப்ரவரி 2026, 3:17 PM
இளம் தலைமுறையினருக்குத் தமிழ் மரபைக் கற்றுத் தரும் பரதநாட்டியம்

ஷா ஆலம், பிப் 8 - தென்னிந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பரதநாட்டியம், தற்போது இந்தியர்கள் வாழும் பல நாடுகளில் பிரபலமாக இருந்து வருகிறது. அதில் மலேசியா முக்கிய இடத்தை வகிக்கிறது என்றால் அது மிகையில்லை.

தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை, கடந்த 14 ஆண்டுகளாகப் பல மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வரும் திருமதி கலைவாணி அவர்கள், தனது அனுபவங்களை மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.

தனது 6 வயதிலிருந்தே பரதநாட்டியத்தைக் கற்று வரும் கலைவாணி, கடந்த 14 வருடங்களாகப் பகுதி நேரமாக இந்த பரதநாட்டிய வகுப்பை நடத்தி வருகிறார். எனினும், இந்த ஆண்டு தொடங்கி முழு நேரமாக இதில் ஈடுபட முடிவு செய்துள்ளார் அவர். தற்போது அவரது வகுப்பில் 5 முதல் 55 வயது வரை உள்ள 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கலையைக் கற்று வருகின்றனர்.

பரதநாட்டியம் பரதமுனிவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுவதோடு, பண்டையக் காலத்தில் 'சதிராட்டம்' என அழைக்கப்பட்ட இந்த நடன வடிவத்தை 'பரதநாட்டியம்' எனப் பெயர் மாற்றம் செய்து, அதை அனைவராலும் கற்கக்கூடிய ஒரு தூய கலை வடிவமாக மாற்றியவர் ருக்மிணி தேவி அருண்டேல் என கலைவாணி தெரிவித்தார்.

பரதநாட்டியத்திற்கு மிக முக்கியமான கூறுகள் பாவம், தாளம் மற்றும் ராகம் ஆகும். அதாவது முகபாவனைகள், உடல் அசைவுகள், முத்திரைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதே பாவம் ஆகும். அதோடு ராகங்கள் குறிப்பிட்ட மனநிலைகளையும், உணர்வுகளையும் தூண்டும் வல்லமை கொண்டவையாகும். இறுதியாக நிகழ்ச்சியை முன்னோக்கி நகர்த்தும் இதயத் துடிப்பு போன்றது தாளம் என கலைவாணி விளக்கினார்.

பிற கலைகளுடன் ஒப்பிடுகையில் பரதநாட்டியம் எவ்வாறு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பது குறித்து கலைவாணி விளக்கம் அளித்தார். பரதநாட்டியம் ஆடும் போது மூளையும் உடலும் இணைந்து செயல்பட வேண்டும். இதன் காரணமாக வயது முதிர்ந்த காலங்களிலும் நம் சுறுசுறுபாகவும் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த கலை துணைபுரிவதாக அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமில்லாமல், உடல் அசைவுகள் மூளையின் இரு பகுதிகளையும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகின்றன என்றார் அவர்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பரதநாட்டியத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்துள்ள நிலையில் அதில் ஒரு கட்டுப்பாடு அவசியம் என கலைவாணி கேட்டு கொண்டார். கடவுளை மையமாகக் கொண்ட பரதநாட்டியத்திற்குப் பாடல் வரிகளைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் இளைய தலைமுறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கூடுதலாக, பரதநாட்டியம் நமது தமிழ் மரபுகளையும் கலாச்சாரங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கற்று தருவதாகக் கலைவாணி குறிப்பிட்டார். அதாவது, இந்த நடனக் கலையைக் கற்று கொள்ள வகுப்பிற்கு வரும் மாணவர்களின் தோற்றத்தில் நமது கலாச்சாரம் இன்னும் வாழ்வதாக அவர் கூறினார்.

மேலும், கடவுள் பாடல்களில் இடம்பெறும் புராணக் கதைகளின் அர்த்தத்தை மாணவர்களுக்கு விளக்கும் போது தமிழர்களின் மரபு மற்றும் வரலாறு மறைமுகமாக அவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஆகவே, இவ்வளவு சிறப்புமிக்க இந்த பரதக்கலையைக் கற்று கொள்ள நமது இளம் தலைமுறையினர் ஊக்கவிக்கப்பட வேண்டும் என அவர் தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.