புத்ராஜெயா, பிப் 9- மலேசியா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ரிங்கிட் மற்றும் ரூபாயின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
திறமையான மற்றும் குறைந்த செலவிலான பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், ரிங்கிட் மற்றும் ரூபாயைப் பயன்படுத்தி உள்ளூர் நாணயத் தீர்வை ஊக்குவிக்க பேங்க் நெகாரா மலேசியா மற்றும் இந்திய மத்திய வங்கி தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்று அன்வார் கூறினார்.
"அதேபோல, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி மற்றும் குறைக்கடத்தி (semiconductor) துறைகளிலும் உள்ளூர் நாணயப் பயன்பாடு விரிவுபடுத்தப்படும்,” என்று அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான கூட்டுப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், திரு. மோடி பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியா வந்துள்ளார். இது, கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பிரதமர் அன்வார் இந்தியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு எட்டப்பட்ட 18.59 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி மலேசியா-இந்தியா இருதரப்பு வர்த்தகம் இந்த ஆண்டு உயரும் என நிதி அமைச்சருமான அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியான் பின்னணியில், இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான கூடுதல் வழிகளையும் வாய்ப்புகளையும் இப்பிராந்தியம் பெற்றால் மலேசியா நிச்சயமாக பெரும் பயனடையும் என்று அவர் கூறினார்.
1957-ஆம் ஆண்டு முதல் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது மிகவும் உத்திப்பூர்வமானது மற்றும் முக்கியமானது. இந்த உறவு 2024-இல் ஒரு விரிவான உத்திப்பூர்வ கூட்டாண்மை மூலம் மேம்படுத்தப்பட்டது.
"வரலாற்று ரீதியான ஆழமான உறவுகள், வலுவான மக்கள் தொடர்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை வர்த்தகம் மற்றும் முதலீடு, குறைக்கடத்தி, டிஜிட்டல் பொருளாதாரம், உள்ளூர் நாணய வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தும்," என்றார்.
மேலும், மலேசியா-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (MICECA) மறுஆய்வு செய்து மேம்படுத்துவதை விரைவுபடுத்தவும், குறைக்கடத்தி, டிஜிட்டல் வர்த்தகம், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட உயர் மதிப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாக அன்வார் கூறினார்.
“மலேசியா-இந்தியா டிஜிட்டல் கவுன்சில் (MIDC) அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) மற்றும் பேநெட் மலேசியா இடையே இருதரப்பு கட்டண இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன," என்றார் அவர்.
இதற்கிடையில், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் பரிமாற்றத்திற்கான அதிகரித்து வரும் தேவையை ஆதரிக்க, கூடுதல் திறன் மற்றும் முக்கிய பிராந்தியங்களுக்கு அப்பாற்பட்ட இரண்டாம் நிலை நகரங்களுக்கான அணுகல் உட்பட, விமானப் போக்குவரத்து உரிமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு இந்தியாவிடம் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.
அதேவேளையில், குறைக்கடத்தி விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு மற்றும் திறமை மேம்பாட்டை வலுப்படுத்த இந்தியாவில் பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) மற்றும் ஜென்டாரியின் முன்னேற்றத்தையும் அவர் வரவேற்றார்.


