கோலாலம்பூர், ஏப்ரல் 13: தமிழ் மற்றும் சீக்கிய சமூகத்தினர் நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு மற்றும் வைசாக்கியைக் கொண்டாடவிருக்கின்றனர்.
அதேவேளையில், மலையாளி சமூகத்தினர் தங்களது விஷு பண்டிகையை எதிர்வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15) கொண்டாடவுள்ளனர். இந்த கொண்டாட்டங்கள், மலேசியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் உணர்வைப் பிரதிபலிக்கின்றன.
வெவ்வேறு பாரம்பரியங்களில் வேரூன்றி, வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும், இந்தப் பண்டிகைகள் புதுப்பித்தல், நன்றி செலுத்துதல் மற்றும் ஒன்றுகூடல் போன்ற முக்கிய விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
இதற்கு முன்னர், தெலுங்கு சமூகம் தங்களது புத்தாண்டான யுகாதியை கடந்த மார்ச் 19-ஆம் தேதி கொண்டாடியது. இது மலேசிய சமூகத்தினரிடையே உள்ள கலாச்சாரக் கொண்டாட்டங்களின் பன்முகத்தன்மையை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
தமிழர்ப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய இந்து சங்கம் (MHS) வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இக்கொண்டாட்டம் ஒரு வருடத்தின் அடையாள மாற்றத்தை மட்டும் குறிக்கவில்லை என்றும், மாறாக சிந்தனைகளைப் புதுப்பிக்கவும், இலக்குகளை ஒன்றிணைக்கவும், செயல்களில் தைரியத்தைக் காட்டவும் விடுக்கும் அழைப்பு என்றும் விவரித்துள்ளது.
அதன் தலைவர், தி. கணேசன் கூறுகையில், 'பராபவ' ஆண்டு என அறியப்படும் தமிழ்ப் புத்தாண்டு, ஸ்ரீ கஜலட்சுமி பஞ்சாங்கத்தின்படி காலை 11.15 மணிக்கு பிறக்கிறது. இதுவே, தமிழின் சித்திரை மாதத்தின் முதல் நாளையும் குறிக்கிறது. "காலை 7.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை நீடிக்கும் 'விஷு புண்ணிய காலம்' எனும் புனித நேரத்தில், பக்தர்கள் வழிபாடுகள், தானதர்மங்கள் மற்றும் அர்த்தமுள்ள பிற செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அகில மலேசிய மலையாளி சங்கத்தின் (AMMA) தலைவர் டாக்டர் மனோகர் குரூப் கூறுகையில், மலையாள நாட்காட்டியின் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் விஷுப் பண்டிகை, புதுப்பித்தலையும் செழிப்பையும் முன்னிறுத்துகிறது. இவ்வாண்டு, விஷு ஏப்ரல் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
"குடும்ப உறுப்பினர்கள் அதிகாலையிலேயே எழுந்து 'விஷுக்கனி' தரிசனத்துடன் தங்களது நாளைத் தொடங்குவார்கள். அதைத் தொடர்ந்து, 'விஷுக்கைநீட்டம்' எனும் பாரம்பரிய நிகழ்வில், பெரியவர்கள் இளையவர்களுக்கு ஆசீர்வாதத்தின் அடையாளமாகப் ரொக்கப் பரிசுகளை வழங்குவார்கள். அதோடு, ஆலயங்களுக்கும் சென்று வழிபடுவார்கள்," என்றார் அவர்.
சீக்கிய சமூகத்தின் வைசாக்கி கொண்டாட்டம் குறித்து, மலேசிய சீக்கிய நௌஜவான் சபா தலைவர் பரம்ஜீத் சிங் ஜெய் சிங் கூறுகையில், இது சீக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய பண்டிகையாகும். நாடு முழுவதும் உள்ள சுமார் 130 குருத்வாராக்களில் சிறப்புப் பிரார்த்தனைகள், சமூக விருந்துகள் மற்றும் சமூக சேவைத் திட்டங்களுடன் இது கொண்டாடப்படுகிறது என்றார்.
"1699-ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங்கால் 'கல்சா' தோற்றுவிக்கப்பட்டதை வைசாக்கி குறிக்கிறது. இது வீரம், சமத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்வதோடு, சீக்கிய சமூகத்தை ஒரு தனித்துவமான ஆன்மீக அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்கிறது," என்று அவர் கூறினார்.
இதனிடையே, மலேசிய-இந்திய பாரம்பரிய சங்கமும் தெற்காசியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் புத்தாண்டைக் கொண்டாடும் சமூகங்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
இந்த கொண்டாட்டங்கள், வெவ்வேறு மரபுகளைக் கொண்டிருந்தாலும், புதுப்பித்தல், பருவகால மாற்றங்கள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பொதுவான மதிப்பீட்டைப் பிரதிபலிப்பதாக அதன் தோற்றுநர் தலைவர் பிரபாகரன் நாயர் கூறினார்.








