ஷா ஆலம், பிப் 6- தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் நுழைவுப்பாதை தொடர்பான சிக்கல், 2009-ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக நீடித்து வந்ததைத் தொடர்ந்து இதற்கான தீர்வாக, சுங்கை லோங் சாலையிலிருந்து சுமார் 383 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு புதிய சாலையை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு RM3.3 மில்லியன் ஆகும். தொடர் முரண்பாடுகளைத் தவிர்க்கவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்யவும், இப்பகுதியின் வருங்கால மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணையாக அமையவும் இப்பரிந்துரையே மிகவும் பொருத்தமான தீர்வாகக் கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் இன்று காலை நடைபெற்ற மாநிலச் செயற்குழு (EXCO) கூட்டத்தில், இந்தப் புதிய சாலை கட்டுமானத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதனை விரைவாகச் செயல்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து PJS 4 பகுதியில் JAIS-க்கு ஒதுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மயான நிலத்தில், ஒப்பந்ததாரர்கள் தங்கள் பணிகளைத் தடையின்றித் தொடர, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்பதையும் மாநில அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
“குறிப்பிட்ட அந்த நிலத்தில் அமைந்திருந்த ஸ்ரீ மகா மாரியம்மன் டேசா பெராங்சாங், ஸ்ரீ கோட்டை மதுரை வீரன் தாமன் டேசா ரியா மற்றும் பெட்டாலிங் டின் சீக்கியர் சங்கம் ஆகிய மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கு, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட மாற்று நிலங்களுக்கு இடமாற்றம் செய்ய முன்வந்துள்ளதாக” பாப்பாராய்டு தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை மிகுந்த கவனத்துடனும் கையாண்டு, ஒரு சுமுகமான தீர்வைக்காண உதவிய சிலாங்கூர் மாநில முதல்வருக்கும், மாநிலச் செயற்குழு (EXCO) உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


