சிலாங்கூர் வேலைவாய்ப்புச் சந்தையில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

10 ஜூன் 2026, 4:50 AM
சிலாங்கூர் வேலைவாய்ப்புச் சந்தையில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 10 – 'சிலாங்கூர் ஜோப்கேர்' (JobCare) வேலைவாய்ப்புச் சந்தை, வேலை தேடும் நபர்கள் நிறுவனங்களின் முதலாளிகளை நேரடியாகச் சந்தித்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கான நல்வாய்ப்பை வழங்குகிறது. இந்த நிகழ்வு எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி சனிக்கிழமை செலாயாங், ஸ்ரீ சியந்தான் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு சந்தையில், பல்வேறு துறைகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுப் பொதுமக்களுக்குப் பலதரப்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதுடன், தகுதிக்கேற்ற வேலைகளை உடனுக்குடன் தேர்ந்தெடுக்கும் செயல்முறையையும் எளிதாக்கவுள்ளன.

இந்த முகாம் குறித்துத் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மனிதவளத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, இத்தகைய நேரடி நேர்முகத் தேர்வு முறையானது வேலை தேடுபவர்கள் தங்களின் வருங்கால முதலாளிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடவும், தங்களின் விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை விரைவாகத் தெரிந்துகொள்ளவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைவாய்ப்புச் சந்தையின் வழி, பங்கேற்பாளர்கள் வேலைகளுக்கு விண்ணப்பிப்பதோடு மட்டுமல்லாமல், அங்கேயே நேரடியாக நேர்முகத் தேர்வுகளிலும் கலந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

பல்வேறு பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்த முகாமில் கலந்துகொள்ளவுள்ள வேளையில், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பொதுமக்களுக்குக் காத்திருக்கின்றன. இவற்றுடன், வேலை தேடுபவர்களுக்கான ஆலோசனைச் சேவைகள், தொழில் வழிகாட்டல்கள் மற்றும் 'மைபியூச்சர்ஜோப்ஸ்' (MYFutureJobs) தளத்தில் பதிவு செய்வதற்கான உதவிகளும் இந்த முகாமில் வழங்கப்படவுள்ளன.

எனவே, இளைஞர்கள், புதிய பட்டதாரிகள் மற்றும் வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பாப்பாராய்டு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களின் மேம்படுத்தப்பட்ட சுயவிவரக் குறிப்பு (Resume), தொடர்புடைய சான்றிதழ்கள் ஆகியவற்றைத் தயாராக எடுத்து வருவதோடு, நேர்முகத் தேர்வுக்கு ஏற்றவாறு முறையான உடைகளை அணிந்து வருமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

'ஜோப்கேர் இஸ்திமேவா' (JobCare Istimewa) மற்றும் 'ஜோப்கேர் பிரீமியம்' (JobCare Premium) என இரண்டு முக்கியப் பிரிவுகளாக நடத்தப்படும் இந்த முகாமில், மொத்தம் 4,000 வேலைவாய்ப்புகளை வழங்குவதே இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி, மாநிலத்தில் வேலையில்லாப் பிரச்சனையைக் களையும் நோக்கில் இத்திட்டத்திற்காக 10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக இதில் தொழில்முறை சான்றிதழ் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களும் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.