பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் - 90 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்

8 ஜூன் 2026, 1:37 AM
பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் - 90 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்

ஷா ஆலம், ஜூன் 8 –'லிண்டோங் 24 மணிநேரம்' (LINDUNG 24 Jam) எனும் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், தொழிலாளர்கள் வேலை செய்யாத நேரங்களிலும் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை பெர்கேசோ (PERKESO) விரிவுபடுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, அவர்களுக்கு மிகவும் விரிவான பாதுகாப்பை வழங்கும் இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் சிலாங்கூர் மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு பெரிதும் பாராட்டியுள்ளார்.

இது குறித்து மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "ஒருவருக்கு விபத்து ஏற்படும் அபாயமானது வீட்டில் இருக்கும் போதும் அல்லது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும் என எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

தற்போது புதிய திட்டத்தின் கீழ், வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு மட்டுமன்றி, வேலை நேரத்தைத் தாண்டி வெளியில் நடக்கும் விபத்துகளுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்பின் மூலம் நாடு முழுவதும் 90 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது பொதுமக்கள் சந்தித்து வரும் வாழ்வாதாரச் செலவின உயர்வுகளுக்கு மத்தியில், இத்தகைய மிக விரிவான காப்பீட்டுப் பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு மிகவும் இன்றியமையாதது என்று பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.

எதிர்பாராத ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது விபத்துகள் நேரிடும் பட்சத்தில், தங்களுக்குத் துணையாக ஒரு வலுவான பாதுகாப்பு அரண் இருக்கிறது என்ற நிம்மதியை இந்தத் திட்டம் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கும் என அவர் கூறினார்.

கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல், 1969ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ் பங்களிப்பு செய்யும் 90 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள், வேலைக்கு அப்பாற்பட்ட நேரங்களில் ஏற்படும் விபத்துகளுக்கான இந்த முழுமையான காப்பீட்டுப் பாதுகாப்பைத் தானியங்கி முறையில் (automatic) பெற்று அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் முன்னதாக வெளியிட்டிருந்த அறிக்கையில், 1969ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டமானது, பொது விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நேரங்களிலும் தொழிலாளர்களுக்கு மிகவும் பரந்த அளவிலான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த 'லிண்டோங் 24 மணிநேரம்' திட்டத்தின் கீழ், சந்தாதாரர்களின் நல்வாழ்வையும் அவர்களின் வாழ்வாதாரத் தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காகப் பெர்கேசோ மொத்தம் எட்டு வகையான பலன்களை வழங்குகிறது.

அதில் மருத்துவப் பலன், தற்காலிக ஊனமுற்றோருக்கான பலன், நிரந்தர ஊனமுற்றோருக்கான பலன் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கான (குடும்பத்தினருக்கான) பலன்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளடங்கியுள்ளன.

இவற்றுடன், தொடர் பராமரிப்பு, மரணச் சடங்கு நிதியுதவி, உடல் நலம் மற்றும் தொழில்முறை மறுவாழ்வு வசதிகள் (Return To Work) மற்றும் சந்தாதாரர்களின் வாரிசுகளின் எதிர்காலத்தைக் காப்பதற்கான கல்விப் பலன் போன்ற பல்வேறு சலுகைகளும் இத்திட்டத்தின் கீழ் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.