ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

4 பிப்ரவரி 2026, 8:45 AM
ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

ஷா ஆலம், பிப் 4- கடந்த ஆண்டு வாலிபர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் இன்று ஜொகூர் பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

32 வயதான ஆர். அரசன் மற்றும் அவரது மூத்த சகோதரர் 36 வயதான ஆர். யுதேஷ் ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை வாசிக்கக் கேட்டுக் கொண்டனர். மஜிஸ்திரேட் நபிலா நிசாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவர்களிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று 'பெரித்தா ஹரியான்' செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையின் படி, அவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2025 செப்டம்பர் 15 அன்று, நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.00 மணிக்குள், கங்கார் புலாயில் உள்ள ஒரு எண்ணெய் பனைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள வீட்டில் வி. தமிழ்ச்செல்வன் (28) என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

முன்னதாக, கங்கார் பூலாய் எண்ணெய் பனைத் தோட்டப் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உள்பட ஆறு பேரின் எலும்புக்கூடுகள் தொடர்பான வழக்கிலும் இவர்கள் முக்கிய சந்தேக நபர்களாகக் கருதப்படுகின்றனர். 

நேற்று ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் கூறுகையில், கடந்த ஜனவரி 9 அன்று காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடிச் சென்ற ஒருவர், அங்கு எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துப் புகார் அளித்ததாகத் தெரிவித்தார்.

விசாரணையில் அந்த எலும்புக்கூடுகள் 35 வயது பெண், 19 வயது இளம்பெண், 9 மற்றும் 5 வயது சிறுமிகள், 2 வயது சிறுவன் மற்றும் 29 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் ஆகியோருடையது என்பது தெரியவந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.