சிலாங்கூர், பிப் 4 – 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலாங்கூர் மாநில விளையாட்டு குழு 80 தங்க பதக்கங்களை இலக்காக கொண்டுள்ளது.
மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் முகமட் நிஜாம் மர்ஜுகி இது குறித்துக் கூறுகையில், இப்போட்டியில் இடம்பெறவுள்ள 37 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் மொத்தம் 474 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் 15 முதல் 20 விழுக்காடு போட்டிகளில் சிலாங்கூர் மாநில வீரர்கள் சாம்பியன் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளனர் என்றார்.
"ஒட்டுமொத்த வெற்றியாளராகத் திகழ்வதற்கு இந்த எண்ணிக்கை எங்களுக்குப் போதுமானதாக இருக்கும். எனினும், விளையாட்டுத் துறையில் எந்நேரமும் மாற்றங்கள் நிகழலாம். கடந்த சுக்மா போட்டிகளைப் பார்க்கும்போது, நாம் அதிக அளவிலான வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையே வென்றிருந்தோம்.
இம்முறை ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவிலும் தங்கம் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எளிதாகக் கணக்கிட்டால், 37 விளையாட்டுப் பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றாலே 37 பதக்கங்கள் கிடைத்துவிடும். ஒரு பிரிவில் இரண்டு தங்கம் கிடைத்தால், 60-க்கும் மேற்பட்ட பதக்கங்களை எட்டிவிடலாம்.
இதற்குப் பயிற்சியாளர்களும் வீரர்களும் தங்களின் பங்களிப்பைச் சரியாக வழங்க வேண்டும். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது என்பது வெற்றிக்கான இறுதிப் படியாகும். அந்த வாய்ப்பைத் தவறவிடாமல், முழு மனதுடனும் விடாமுயற்சியுடனும் போராடி தங்கத்தைப் பெற வேண்டும்," என்று அவர் மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சுக்மா போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவுள்ளது. சிலாங்கூர் மாநிலம் இவ்வாண்டுக்கான சுக்மா போட்டியின் உபசரணை மாநிலமாக உள்ளது.


