ஷா ஆலம், மே 22 – உதவிப் பொருட்களைப் பெறும் சிறு தொழில்முனைவோருக்கு முறையான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்காக 'சிலாங்கூர் சிறு வணிகர் உருமாற்றத் திட்டம்' அல்லது 'டேப்ஸ்' (TABS) எனும் புதிய திட்டத்தை அதிகாரப்பூர்வமாக சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்மாநில அரசு வழங்கும் வணிக உபகரணங்களைப் பெறும் சிறு வணிகர்கள், தங்களின் வியாபாரத்தை வெறும் உதவிப் பொருட்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அதனை அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்த உருமாற்றத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தேர்ந்தெடுக்கப்படும் பயனாளர்களுக்கு வணிகக் கல்விப் பயிலரங்குகள், வழிகாட்டிகளின் ஆலோசனைகள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் வணிகத்தைத் தொய்வின்றி நடத்துவதற்கான உத்திகள் ஆகியவை கற்றுத் தரப்படும்.
இது குறித்து மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், சிலாங்கூர் வறுமை ஒழிப்பு புளூபிரின்ட் (Blueprint Pembasmian Kemiskinan Selangor) மற்றும் 'ஐ-சீட்' (i-SEED) போன்ற முந்தைய திட்டங்களின் கீழ், பயனாளர்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக உபகரணங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால், தற்போதைய புதிய அணுகுமுறையின் கீழ், அவ்வாறு உதவி பெறும் தொழில்முனைவோர் சந்தையில் நீடித்து நிலைத்து வளர்வதற்குத் தேவையான அறிவையும் திறன்களையும் பெற்றிருப்பதை மாநில அரசு உறுதி செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அதற்கேற்ப, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள், ஆலோசனைகள், புதிய வணிக யோசனைகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை இந்த 'டேப்ஸ்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தொடர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.
மேலும், தற்போதைய வணிகச் சூழலில் சந்தைப்படுத்துதல் மற்றும் தயாரிப்புகளின் தரம் ஆகிய இரண்டுமே சிறு தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக உருவெடுத்துள்ளன என்று பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.
இன்றைய போட்டி நிறைந்த சந்தையில் நிலைத்து நிற்க வேண்டுமானால், வலுவான சந்தைப்படுத்தல் உத்திகளும் உயர்தரமான தயாரிப்புகளும் மிக அவசியமாகும்.
எனவே, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகமும் (PKNS) இந்த ஏற்பாட்டுக் குழுவும் இணைந்து, நம் நாட்டு தொழில்முனைவோர் தங்களின் சந்தைப்படுத்தல் அணுகுமுறைகளை வலுப்படுத்தவும், தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தவும் உதவ வேண்டும் எனப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் தேசிய அளவிலாவது மற்ற வணிகர்களுடன் சமமாகப் போட்டியிடும் ஆற்றலைப் பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் அறிக்கையின்படி, 'டேப்ஸ்' என்பது சிலாங்கூர் மாநில அரசின் உதவிப் திட்டப் பயனாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு படிநிலை வாரியான தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமாகும்.
இது சிறு வணிகர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களின் வருமானத்தை உயர்த்துதல் மற்றும் நீண்ட கால பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் சிலாங்கூர் வறுமை ஒழிப்பு புளூபிரின்ட் திட்டத்திற்குப் பக்கபலமாகச் செயல்படும்.
சிலாங்கூர் மாநிலத்தில் குறைந்தது ஒரு வருடமாவது தீவிரமாக வணிகம் செய்து வரும், தனிநபர் அல்லது குடும்ப வருமானமாக மாதம் 3,000 ரிங்கிட்டிற்கும் குறைவாக ஈட்டும் நுண் மற்றும் சிறு தொழில்முனைவோரை இலக்காகக் கொண்டே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.








