கோலாலாம்பூர், பிப் 3 - தற்போது ஊழியர் சேமநிதி வாரிய சந்தாத்தாரர்களில் பெரும்பாலோர் ஓய்வுக்காலத்தில் RM100,000க்கும் குறைவான தொகையுடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால், மலேசியர்களின் ஓய்வுக்கால சேமிப்பு இனி போதாது என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
தற்போது, 74 விழுக்காட்டினர் RM100,000க்கும் குறைவான சேமிப்பு உடனே ஓய்வு பெறுகின்றனர். இந்தத் தொகை, ஒருவருக்கு சுமார் 5 ஆண்டுகள் மட்டுமே போதுமானதாக உள்ள நிலையில் தம்பதிகள் என்றால் 3 முதல் 4 ஆண்டுகள் வரை மட்டுமே இந்த தொகை போதுமானதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது ஒரு தனிநபருக்கு மாதம் RM1,500 அல்லது தம்பதிகளுக்கு RM2,500 மட்டுமே வரும். இது, நாட்டின் குறைந்தபட்ச சம்பளமான RM1,700 விட குறைவாகும். ஆனால், மலேசியர்கள் ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ RM1.3 முதல் RM1.5 மில்லியன் வரை தேவைப்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரியான திட்டமிடல் இல்லையென்றால், சேமித்து வைத்த EPF பணம் ஒருவரின் ஓய்வுக்கால தேவைகளுக்கு போதுமானதாக இருக்காது என்பதில் ஐயமில்லை.
எனவே, ஓய்வுக்கால பாதுகாப்புக்கான கொள்கை மாற்றங்கள், நிதி திட்டமிடல் மற்றும் விழிப்புணர்வு அவசியத்தை இப்புதிய ஆய்வு வலியுறுத்துகிறது.


