எரிக்கப்பட்ட வீட்டிற்குள் ஆறு பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

3 பிப்ரவரி 2026, 9:28 AM
எரிக்கப்பட்ட வீட்டிற்குள் ஆறு பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

ஷா ஆலாம், பிப் 3: ஜொகூர் பாரு, கங்கார் பூலாயில் உள்ள ஒரு எண்ணைபனை தோட்டத்தில் எரிந்த வீட்டிற்குள், நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்பில்லாத தனது குடும்ப உறுப்பினர்களைத் தேடிச் சென்ற 48 வயது நபர் ஒருவரால், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஜொகூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார். அந்த நபர் பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகள் அந்த இடத்தில் வசித்து வந்ததாகக் கூறியுள்ளார்.

"இஸ்கந்தர் புத்திரி மாவட்டக் காவல்துறைத் தலைமையகம் அந்த நபரிடமிருந்து புகாரைப் பெற்றது. பிரேதப் பரிசோதனை முடிவுகளின்படி, அங்கு குறைந்தது ஒரு பெரியவர் மற்றும் ஒரு சிறுவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை கண்டெடுக்கப்பட்டபோது சிதையாத நிலையில் இருந்தன. அவர்கள் இறந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருக்கலாம் என்று நோயியல் அறிக்கை கூறுகிறது," என அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், பலியானவர்கள் 35 வயதுள்ள ஒரு தாய், அவரது 5, 9, 17 வயதுள்ள மூன்று மகள்கள், 2 வயது மகன் மற்றும் அந்தத் தாயின் நண்பரான 29 வயது ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஜனவரி 21-ஆம் தேதி 19 முதல் 35 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட நால்வர் இஸ்கந்தர் புத்திரியில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் அனைவருக்கும் குற்றப் பின்னணி இருப்பதும், மூவர் மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் தெரியவந்தது. சந்தேக நபர்களுக்கும் பலியான பெரியவர்களுக்கும் இடையே நட்பு இருந்ததும், அவர்கள் போதைப்பொருள் விவகாரங்களில் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் படுகொலை நடந்த இடம் பிரதான சாலையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இரண்டு ஆண்கள் மீது நாளை ஜொகூர் பாரு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன் பிரம்படியும் விதிக்கப்படலாம். மற்ற இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இது குறித்துத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.