ஈப்போ, ஜன 30 — தாமான் கிளெடாங் எமாஸ் பகுதியில் உள்ள இரு மாடி வீட்டில் அதிகாலை நடந்த கேஸ் சிலிண்டர் வெடிப்பில் 63 வயது பெண் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.
ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அஹ்மத் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக காலை 4.57 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்தது.
“பாதிக்கப்பட்டவரின் மகள்களில் ஒருவர் வலுவான கேஸ் வாசனை வந்ததை உணர்ந்து ஏதோ தவறு இருக்கலாம் என்று சந்தேகித்தார். எந்த ஆபத்தும் நிகழாமல் இருக்க வீட்டை விட்டு வெளியேற தாயையும் இளைய சகோதரி-யையும் எழுப்பினார். வெளியேறும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர் சமையலறைக்குச் சென்று கேஸ் சிலிண்டர் வால்வை மூட முயன்றார்.
திடீரென வெடிப்பு ஏற்பட்டு அவரது முகம் மற்றும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது” என்று அவர் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். பாதிக்கப் பட்டவரின் இரு மகள்களும் பாதுகாப்பாக உள்ளனர். சம்பவ நேரத்தில் அவரது கணவர் வீட்டில் இல்லை என்று ஜைனல் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.


