பக்தி காவடிகளை உருவாக்கும் பெருமாள்

30 ஜனவரி 2026, 10:04 AM
பக்தி காவடிகளை உருவாக்கும் பெருமாள்
பக்தி காவடிகளை உருவாக்கும் பெருமாள்

தைப்பூசத் திருவிழாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்று காவடி ஆகும். பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் அல்லது நேர்த்திக்கடன்கள் நிறைவேறியதற்காக, முருகப் பெருமானுக்குப் பக்தியும் நன்றியும் செலுத்தும் அடையாளமாக காவடியைச் சுமந்து கொண்டு செல்வார்கள்.

திருவிழா காலங்களில் காவடிகளைப் பார்த்து அதன் மீது ஆர்வம் ஏற்பட்டு 19 வயதில் காவடியைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளார் பந்திங்கில் வசிக்கும் பெருமாள். தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வரும் அவர் பகுதி நேரமாகச் சுமார் 25 வருடங்களாக இத்தொழிலைச் செய்து வருகிறார்.

பெருமாள், தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் இந்த காவடி தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இதற்கு அவரின் நண்பர்களும் உதவியாக இருக்கிறார்கள்.

பேராக், ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காகக் காவடிகளை வடிவமைத்து தருகிறார் பெருமாள். அவர் இந்தியாவிலிருந்து மூலப்பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களைக் குறிப்பாக மயில் இறகு போன்றவற்றை ஆர்டர் செய்து வாங்கி வருகிறார்.

காவடிகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில், மயில் காவடி (மயில் காவடி) பல ஆண்டுகளாக தைப்பூச விழாவின் அடையாளமாக இருந்து வருகிறது. அதனால், மயில் காவடிகளை உருவாக்குவதில் அவர் அதிக கவனம் செலுத்து வருகிறார்; இருந்தபோதிலும், தன்னால் முடிந்தால் மக்களின் விருப்பத்திற்கேற்ப காவடியைச் செய்து கொடுப்பதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.

மயில் காவடிகளின் அழகை மேலும் அதிகரிக்க, அவரது குடும்பம் அதில் LED விளக்குகளைப் பொருத்துகிறது. இதனால் இரவு நேரங்களில் அவை மிகவும் கண்கவர் தோற்றம் பெறுகின்றன.

காவடி முருகப் பெருமானுக்குக் அர்ப்பணிக்கப்பட்டது, பக்தர்கள் இதை காணிக்கையாக வழங்கப் போகின்றனர். அதனால், ஒவ்வொன்றும் சரியானதாக இருக்க வேண்டும் என்பதனால் நான் காவடிகளை மிக கவனமாக செய்கிறேன் என்றார் பெருமாள். காவடி தயாரிப்பு காலம் முழுவதும் தான் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதாகவும் பெருமாள் கூறினார்.

இதற்கிடையில், காவடி செய்யும்போது முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டியது, எடை சமமாகப் பகிரப்பட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் பக்தர்கள் அதை எளிதில் சுமக்க இயலும்.

“காவடி செய்ய கடவுளின் மீது அன்பும் ஆழ்ந்த ஆர்வமும் தேவை. ஒவ்வொரு காவடியும், பக்தர் அதை சுமக்கும் போது தெய்வீகமும் அழகும் வெளிப்படுமாறு மிக நுணுக்கமாக உருவாக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் இறை அம்சங்களை மட்டுமே மையமாகக் கொண்டு காவடிகளை வடிவமைப்பதாகவும் பெருமாள் குறிப்பிட்டார்.

மேலும், ஒவ்வொரு அம்சமும் காவடி நீடித்ததாகவும், அழகிய தோற்றம் கொண்டதாகவும் இருக்குமாறும் கவனமாகத் தேர்வு செய்யப்படுகிறது. காவடி வாடகையின் மற்றும் விலை அதன் அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்தது என பெருமாள் கூறினார். இதுவரை வாடிக்கையாளருக்காகத் தயாரித்த மிக அதிக எடை உள்ள காவடி 60 கிலோ ஆகும்.

இந்த ஆண்டின் தைப்பூச விழாவிற்காக, தற்போது வரை தனக்கு 40 ஆர்டர்கள் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாடகைக்குக் கொடுக்கும் காவடிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது சற்று கடிமான வேலை என்றாலும் அதனை தான் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“தைப்பூச காலம் எங்களுக்குப் பரபரப்பான நேரம். ஆனால் இந்த புனித விழாவில் எங்கள் பணி பங்காற்றுகிறது என்பதில் எனக்கு மிகுந்த பெருமை உள்ளது,” என்றார் அவர்.

“நான் காவடி செய்யத் தொடங்கியபோது ஆர்டர்கள் குறைவாக வந்திருந்தன. ஆனால், அதற்குப் பிறகு முகநூல், டிக் டோக் போன்ற சமுக ஊடகங்களின் துணையால் எண்ணிக்கை உயர்ந்ததுள்ளது.

“இளம் தலைமுறை இந்தக் கலைத்திறனைக் கற்றுக்கொள்ள வேண்டும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும், தன்னுடைய அனுபங்களைப் பகிரவும் நான் தயராக உள்ளேன்,” என்றார் பெருமாள்.

கடந்த 2024ஆம் ஆண்டு, சுமார் 24 வருடங்களாக இத்தொழிலில் ஈடுப்பட்டுள்ள பெருமாளுக்குப் பேராக் மாநிலத்தில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இறுதியாக, இந்த காவடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வருங்காலங்களில் சிலாங்கூரில் அங்கீகாரம் வழங்கப்பட்ட வேண்டும் என பெருமாள் கேட்டு கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.