ஜார்ஜ் டவுன், பிப் 4: பினாங்கு மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களாக நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவின் போது பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக மொத்தம் எட்டு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் கூறுகையில், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இதுவரை நான்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார். இதில் இரண்டு வன்முறைக் குற்றங்கள் மற்றும் இரண்டு சொத்து தொடர்பான குற்றங்களும் அடங்கும். இந்த வழக்குகளின் விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு உள்ளூர் ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக 2026-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்டங்கள் மிகவும் கட்டுக்கோப்பாகவும், திட்டமிட்டபடி சுமூகமாகவும் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
"இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீர்செய்ய 1,280 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். சுமார் 1.1 மில்லியன் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த நான்கு நாள் விழாவில் கலந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது," என டத்தோ அசிஸி தெரிவித்தார்.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளி ரதங்களின் ஊர்வலம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் இலக்கை அடைந்தன. முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் பினாங்கு போலீஸ் படை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.


