பந்திங், பிப் 1 - இன்று நாடு முழுவதும் தைப்பூசக் கொண்டாட்டங்கள் பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதில் பந்திங், தெலுக் டத்தோவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூச விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காலை முதல் முருகப் பெருமானுக்குத் தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் மற்றும் பிரார்த்தனை செய்யவும் பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். காவடிகள், பால்குடங்கள் என மக்கள் தங்களின் நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்ற வேளையில் பலர் குடும்பத்தாருடன் வந்து முருகனைத் தரிசித்து செல்லும் வண்ணமாக உள்ளனர். பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகச் சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் வருகை புரிந்தார். அவர் சுமார் ஒரு மணி நேரம் செலவழித்து, இந்த தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கடைகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு மக்களிடம் கலந்துரையாடினார்.
இதற்கிடையில், அந்த ஆலயத்தில் லீமாஸ் (இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான குழு) திட்டத்தின் கீழ் கோல லங்காட்டில் அமைந்துள்ள 13 ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையைப் பாப்பாராய்டு அந்த ஆலயப் பிரதிநிதிகளிடம் எடுத்து வழங்கினார்.

இதில் இந்த நன்கொடை, வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதை எளிதாக்கவும், உள்ளூர் சமூக நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ள முறையில் மேற்கொள்ளவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகத்திற்கு, மாநில அரசு சார்வில் தனது பாராட்டையும் நன்றியையும் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.


