புத்ராஜெயா, ஜன 30 : நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 20,000 கல்வி சேவை அதிகாரிகளை (DG9) ஒப்பந்த நியமனம் (Contract of Service – CoS) அடிப்படையில் பணி அமர்த்துவதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் மார்ச் 2 முதல் 20 வரை திறக்கப்படும்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 23 அன்று வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, கல்வி சேவை ஆணையம் (SPP) உடன் இணைந்து ஏப்ரல் 27 முதல் மே 14 வரை நேர்முகத் தேர்வு செயல்முறைகள் நடத்தப்படும் என கல்வித் துறை தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அசாம் அகமட் கூறினார்.
இந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு முயற்சி, 2026–2035 மலேசிய கல்வித் திட்டம் (RPM) அமலாக்கத்திற்கான முன் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகவும், அடுத்த ஆண்டு ஆறு வயது குழந்தைகள் தன்னார்வ அடிப்படையில் முதல் வகுப்பில் சேர்வதை ஆதரிக்கும் நடவடிக்கையாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“மடாணி அரசின் நோக்கத்திற்கு இணங்க, போதுமான ஆசிரியர் வளம் இருப்பதை உறுதி செய்வதோடு, நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்த கல்வி அமைச்சகம் (KPM) முழுமையாக உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் திறனின் தரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், பள்ளிகளில் பணியமர்த்தப்படுவதற்கு முன், கல்வி அமைச்சகத்தின் ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் (IPG) பல்வேறு சிறப்பு துறைகளில் தொழில்முறை பயிற்சியை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் முகமட் அசாம் கூறினார்.
“இந்த முயற்சி, மலேசியக் குழந்தைகளின் நலனுக்காக நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் மடாணி அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,” என்றார் அவர்.
— பெர்னாமா


