ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை

25 மார்ச் 2026, 1:31 AM
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை

கோலாலம்பூர், மார்ச் 25 - தேசியக் கல்வி புளுபிரிண்ட் எனப்படும் 'தேசியக் கல்வித் திட்ட வரைவு 2026-2035'-இன் கீழ், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதில் கல்வி அமைச்சு தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

இந்தத் திட்ட வரைவின் மூலம், ஆசிரியர்கள் தங்களின் முதன்மைப் பணியான கற்பித்தல் மற்றும் கற்றல் (PdP) நடவடிக்கைகளில் முழுமையாகக் கவனம் செலுத்துவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமை என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

நேற்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இது குறித்துக் கருத்துப் பகிர்ந்துள்ள அமைச்சர், '80-க்கு 20' எனும் கொள்கையின்படி, பாட ஆசிரியர்களின் நேர ஒதுக்கீட்டில் 80 விழுக்காடு கற்பித்தல் சார்ந்த நடவடிக்கைகளுக்கும், எஞ்சிய 20 விழுக்காடு கற்பித்தல் அல்லாத இதர பணிகளுக்கும் ஒதுக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்களின் நலன் என்பது அவர்களின் பணிச்சுமை, பணிச்சூழல், மனரீதியிலான நலம் மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் பல ஆக்கபூர்வமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, எஸ்.பி.எம் (SPM) தேர்வுக் கண்காணிப்புப் பணிகளுக்காக 20,997 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டதோடு, 'மைஸ்டெப்' (MySTEP) திட்டத்தின் கீழ் ஆசிரியர் உதவியாளர்களும், விடுதிகளில் முழுநேரத் துணைக் காப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஆசிரியர்கள் தேவையற்ற நிர்வாகப் பணிகளில் இருந்து விடுபட்டு, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் அதிகக் கவனம் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.