சிலாங்கூரில் நவீன பன்றி பண்ணைகளுக்கான இடத்தை மறுஆய்வு செய்ய மாநில அரசு முடிவு

28 ஜனவரி 2026, 10:02 AM
சிலாங்கூரில் நவீன பன்றி பண்ணைகளுக்கான இடத்தை மறுஆய்வு செய்ய மாநில அரசு முடிவு

கோலாலம்பூர், ஜன 28- சிலாங்கூர் மாநிலத்தின் குடியிருப்பு பகுதிகளுக்கு அப்பால், நவீன பன்றி வளர்ப்பு பண்ணைகளை அமைப்பதற்கான பொருத்தமான இடங்களை மாநில அரசு மீண்டும் மதிப்பீடு செய்யவுள்ளது.

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தஞ்சோங் செப்பாட் (Tanjong Sepat) பகுதியில் பெரும்பாலான பாரம்பரிய பன்றி பண்ணைகள் மூடப்பட்ட போதிலும், கழிவுகள் இன்னும் கடலில் கலப்பதாக அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே, குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகு தொலைவில், அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன பண்ணைகளை அமைப்பதற்கான திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது.

இந்த நவீன பண்ணைகள் உள்நாட்டு சந்தையின் தேவையில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

பேராக், சரவாக் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படும் நவீன மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பண்ணை முறைகளை சிலாங்கூரிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, அதிக முதலீடு மற்றும் வரையறுக்கப்பட்ட உள்ளூர் சந்தை காரணமாக முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், தற்போது மாசடைந்த பண்ணைகளை மூடிவிட்டு, மேம்பட்ட கழிவு மேலாண்மை அமைப்புடன் கூடிய மூடிய பண்ணைகளை உருவாக்குவதே அரசின் இலக்காகும்.

முன்னதாக, உலு சிலாங்கூர், புக்கிட் தாகார் (Bukit Tagar) பகுதியில் முன்மொழியப்பட்ட பெரிய அளவிலான பன்றி பண்ணைத் திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஏற்றுமதிக்காக உருவாக்கப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மை அல்ல என்றும் அமிருடின் ஷாரி தெளிவுபடுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.